புதன், ஜூலை 30, 2008

இரக்கம்

தமிழ்மகன்

ஏற்கெனவே ஒருவன் செத்துப் போயிருந்தான்.

எத்தனையோ பேர் செத்துப் பிழைத்திருந்தார்கள்.

இப்பேர்பட்டவர்களைப் பிழைக்க வைப்பதற்காகவே எங்கோ வேலை செய்து வந்த கம்பவுண்டர்கள் எல்லாம் கூட்டு ரோட்டில் "டாக்டர் கடைகள்' வைக்கத் துவங்கியிருந்தார்கள். எவனாவது ஒரு டாக்டரின் பெயரை போர்டில் போட்டுவிட வேண்டியது. சற்றே விவரமான ஆள், டாக்டரையெல்லாம் விசாரித்தால், "வெளியே போயிருக்கார்...' என்று என்னமோ அப்பத்தான் வெளியே போனது மாதிரி சொல்வார்கள்.

தலைவலி, வயிற்றுவலி, சேற்றுப்புண், சீதபேதி இத்யாதி விஷயங்களுக்குத் தயாராய் சில ஊசி மருந்துகளை வைத்துக் கொண்டு, வெறியோடு குத்துவதற்குக் காத்திருந்தார்கள். பூச்சி மருந்து அடித்து மயங்கி விழுந்தவனென்றால் லட்டு மாதிரி. எழுநூறு ரூபாய் வசூலிக்கிறார்கள்.

" எங்க காலத்துல எப்ப இப்பிடியாகியிருக்கும்? அப்ப இல்லாத பூச்சில்லாம் இப்ப எங்கிருந்து வந்தது? எல்லாம் கலி கலி'' என்று தலையில் அடித்துக் கொண்டார் சரவணரெட்டி.

களை எடுத்துக் கொண்டிருந்ததால் இடுப்பு பிடித்துக் கொண்டதை நிவர்த்தி செய்யும் பொருட்டு, "அப்பல்லா பூச்சே அடிக்காதா?'' என்று கேட்டபடி நிமிர்ந்து நின்றான் ஒருவன்.

"வெறப்பாடு முடிஞ்சா, வேலை முடிஞ்சாப்பல'' என்றார். ஆறு மாசம் கழிச்சு வந்து அறுக்க வேண்டியதுதான்.

"இப்ப மூணுமாசத்துல இல்ல அறுக்கிறம்...? அதுக்கேத்த, செவரெட்சணை செய்றோம்...''

"இன்னொருத்தன், ரெட்டியாரே நெறைய பூச்சி...'' என்றபடி கொத்தாகப் பயிரைப் புடுங்கிக் காண்பித்தான்.
நன்றாய் முளைத்திருந்த பயிர், கதிர் விடும் நேரத்தில் பழுத்துத் கருகியிருந்தது.

"எல்லாத் தலைவயல்லயும் அப்படிதான்'' என்று இன்னொருவன் எழுந்து நிற்க, ரெட்டியார் உஷாராகி, ""பேச்சுக் குடுத்தா போதுமே... கத பேசிக்கிட்டே கூலி வாங்கிடுவீங்களே'' என்றார்.

அந்தப் பக்கமாய் போய்க் கொண்டிருந்த ஆறுமுகரெட்டி, "வேலையைக் கவனிங்கடே'' என்றபடி அருகில் வந்தார்.

சரவண ரெட்டி, "பரவால்யா பயிறு?'' எனóறார்.

"எங்க?'' என்று சப்புக் கொட்டினார் ஆறுமுகம்.

"எவ்ளோ நட்டுருக்கே?''

"தெரியாத்தனமா ஏழு ஏக்கர் நட்டுப்புட்டேன் பூச்சி ஏறிங்கியிருக்குது. போட்ட நெல்லு வருமான்னுருக்குது.''

" என்னமோ மருந்து சொல்றாங்களே அடிச்சியா?''

"எக்காளக்ஸ்... செவின்... பூச்சி என்னமோ சாவுது... அடிக்கிற ஆளும்ல சேந்து செத்துப் போறான்?''

"நானும் அதாம் பாக்றேன்... நேத்து அப்டி நான் இங்கிருந்து பாக்றேன்... அதோ முதலியார் தலைல சிங்காரம் ஸ்பிரேயர்ல மருந்தடிக்கிறான். ரெண்டாவது ரவுண்ட்ல தண்ணியடிச்வனாட்டம் இப்படியும் அப்படியும் ஆடினான். அப்புறம் பாத்தா... மிஷினையெல்லாம் அப்படியே போட்டுட்டு வரப்ல போóய்ப் படுத்துட்டான்.''

"ஐயோ, அப்புறம்...? இவ்ளோ நடந்திருக்கு. எனக்குத் தெரியாதே.''

"நா ஒரே ஓட்டமா ஓடுறேன். அதுக்குள்ள என்னடாது திடீர்னு சத்தத்தையும் காணம். ஆளையும் காணம்னு பாதி பேர் ஓடியாற...''

" ஆ...ங்''

"ஆளு வரப்ல மூச்சு பேச்சில்லாம கிடந்தான். தூக்கிப் போய்க் களத்து மேட்ல போட்டு, மூஞ்சில தண்ணிய அடிக்கவும், ஆளு அப்பிடி இப்பிடி எழுந்து குந்தினான்.''

"அப்ப பொழச்சிட்டான்?''

"பொழச்சிட்டான், பொழச்சிட்டான்... நம்ம மாணிக்கம் என்ன சொன்னான் தெரியுமா?''

"எந்த மாணிக்கம்?''

"அட! நம் புளிமூட்டை...''

"ஆங்...ஆங்...''

"டே சிங்காரம் அப்படியே காலைப் பரப்பிக்குனு படுடா.. கண்ணைத் தெறக்காதே... முதலியார் கிட்ட ஆயிர் ரூப் கறந்திடலாம்ன்றான்...''

"óஅதிலியும் முதலியார்தாங் குடுப்பாரு...''

"பண்ணன கலாட்டால முதலியார் ஆடிப் போயிட்டான் பர்ஸ்டு... அப்புறம் உஷாராயி பத்ரூபா செலவுக்குக் குடுத்து விட்டான்...''

ஆறுமுக ரெட்டி ""கிக், கிக்'' என்று சிரித்தார். "கல்லுல நாறு உரிப்பானே முதலி'' என்றார்.

"ச்செரி... அதாம் பயமாயிருக்கு. எங்க நம்ப நெலத்தில பூச்சி மருந்து அடிக்கப் போயி மண்டையப் போட்டான்னா... போனாப் போகுது ரெட்டியாரே ரெண்டு ஏக்கரா அவங்க குடும்பத்துக்கு எழுதி வெச்சிடுன்னு சுளுவா சொல்லிடுவானுங்களே?''

"ஏன்... இதே மாணிக்கமே ஆரம்பிச்சி வெப்பான்.''

மொத்தத்தில் மருந்தடிக்கத் தோதாய் ஒருவனும் இல்லை. ஒரு நாளெல்லாம் ஒரு ஏக்கர் அடிக்கிறவன்தாóன். அதுவும் நான்கு நாள் சேர்ந்தாற்போல் அடித்தால் ஒருநாள் மயங்கி விழுந்தார்கள். குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாய் நமக்கு வேலை செய்யும்போது செத்துப் போய்விடக் கூடாதே என்பது ஒவ்வொருவரின் அந்தரங்கப் பிரார்த்தனையாய் இருந்தது.

ஆத்தூர் செல்வத்தைப் பற்றி, அதோ அவதாரம் எடுத்து வந்தவன்போல் பேசிக் கொண்டார்கள். இவ்விஷயம் சரவண ரெட்டி காதிலும் அவ்வப்போது விழுந்தது. படியாளை அனுப்பி அழைத்து வரும்படி சொன்னார். வந்தான்.

செல்வம் என்பவன் இஸ்திரி போட்டது மாதிரி பட்டையாய் உயரமாய் இருந்தான். இத்தனை முறை புயல்கள் வந்தும் அவன் ஒடிந்து விழாதது ஆச்சரியமாய் இருந்தது.

சரவண ரெட்டி இப்படித் துவங்கினார்.

"ஆத்தூரா நய்னா நீ?'' என்றார்.

அவன் பணிவாய்ப் பதில் சொல்ல விரும்பி சதா நேரமும் கூன் போட்டவன் மாதிரி நின்றிருந்தான்.

"ஒரு நாளிக்கு எத்தினி ஏக்கர் அடிப்பே?''

"உங்களுக்கு எவ்ளோ அடிக்கணும் சொல்லுங்க?'' என்று திருப்பிக் கேட்டான்.

"இன்னா ஒரு பத்து ஏக்கர்னு வெச்சுக்கயேன்.''

"அப்ப ரெண்டு நாளு'' என்றான்.

"அடேங்கப்பா சாமர்த்தியகாரன்... ஏன் நய்னா... உனக்கு மயக்கம், கியக்கம் வராதில்ல?'' என்று கேட்டு வைத்தார்.

"நமக்கு அதெல்லாம் வராதுங்க'' என்றான் பன்மையில்.

"செரி... எப்ப வர்ரே சொல்லு..?''

சற்றே யோசனையாய் கன்னப் பகுதியில் தேய்த்து விட்டுக் கொண்டான்,

"முக்யமா ரெண்டு பேருக்கு அடிக்க வேண்டியிருக்கு. காவனூர்ல செல்லமுத்து நாயகர்க்கும். வரத நாயகருக்கும். பொண்டாட்டி செத்து போனதால எல்லாம் டிலே ஆயிட்ச்சி''

"ஐய்யய்யோ எப்ப?'' என்றார் சரவண ரெட்டி.

"கிர்த்திகை வந்துதே... அன்னைக்கு மறுநாள்...'' இதைச் சொல்லும்போது அவன் குரல் கம்மிப் போய் விட்டது.

"முழுகாம இருந்தா...'' என்று ஆரம்பித்தவன், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு , லூங்கியால் கண்களைத் துடைத்துக் கொண்டான். திடீரென்று இப்படி அழுகை வந்துவிóட்டது அவனுக்கே சங்கடமாக இருந்திருக்க வேண்டும்.

கிருத்திகை போய் பத்து நாள் கூட ஆகியிருக்கவில்லை. தாஜா பண்ணி நாறைக்கே மருந்தடித்து விட வேண்டும் என்று எண்ணியிருந்த சரவண ரெட்டிக்கும் அதிர்சóசியில் என்ன பேசுவதெனóறு யோசனையிலாழ்ந்தார். உண்மையில் இருவருமே இப்படி ஒரு சூழல் ஏற்படும் என்பதை எதிர்பார்க்கவில்லை.

"...ம்... என்ன ஒடம்புக்கு?'' என்றார் சரவண் ரெட்டி.

"மஞ்ச்க் காமலைன்ட்டு பொன்னேரிக்கு போய் செம்புக் கம்பில சூடு வெச்சுக்குனு வந்தா, வெரல்ல...''

"வெரல்லியா?''

விரலில் சூடு வைத்துக் கொண்டால் அதன் வழியே உடலில் இருக்கிற மஞ்சள் எல்லாம் வெளியே வந்து மஞ்சட் காமாலை போய் விடுவதாக ஒரு நம்பிக்கை உண்டு. அதுவும் ஆள்காட்டி விரலில்தான் சூடு வைப்பார்கள். இதெல்லாம் சரவண ரெட்டிக்குத் தெரியாமலிருக்க நியாயமில்லை. ஏதோ அவன்ó திருப்திக்காகக் கேட்டார்.

"ஆமா..'' என்றான்.

"மஞ்சக் காமாலன்னா கீழாநெல்லிதான் அதுக்கு வைத்தியம்...'' என்று ஒரு மாதிரியாய் விஷயத்தைத் திருப்பினார். "அப்போ... அவங்க ரெண்டு பேருக்கும் முடிச்சிட்டு வரேன்றியா?''

"ரெண் நாள்ல முடிச்சிடுவேன்.''

"முடிச்சுட்டே வா'' என்று அனுப்பி வைத்தார்.

செல்வம் போனதும் படியாளைக் கூப்பிட்டு, " ஏண்டா, கூமூட்டை... பொண்டாட்டி செத்துப் பத்து நாள் தா ஆகுதுன்றான், சொன்னியாடா?'' என்றார்.

"அப்படியா...? இன்னாவாம் ஒடம்புக்கு?'' என்றான்.

"அடிங்... போடா, நாள கழிச்சு வரேன்னு சொல்லியிருக்கேன்... போயீ... சேடóடு கிட்ட பத்து ஏக்கருக்குத் தேவையான மருந்துனு கேளு... அவனே குடுப்பான். எவ்ளோ தண்ணில கலக்கணும். என்னம்மா அடிக்கணும்னு விசாரிச்சுக்குனு வா'' என்றார்.

"துட்டு கேட்டா?''

"கணக்ல எழுதச் சொல்லுடா... அடுத்த வாரத்ல வரேன்னு சொல்லு... ரசீது வாங்க்கினு வா''

"சரி.'' சரவண ரெட்டியார் யோசனையாய் ""ஏண்டா'' என்று போய்க் கொண்டிருந்தவனை நிறுத்தினார்.

"நம்மகிட்ட வேல பார்க்கும்போது செத்துத் தொலையப் போறாண்டா.''

"ஒண்ணும் சாவ மாட்டான்... ஒரு கிளாஸ் ஊத்திக்குனு வன்óட்டான்னா, உயிர் போனா கூட அவனுக்குத் தெரியாது. அதும்பாட்டுக்கு வேல நடக்கும்'' என்றான் தீர்மானமாய்.

உடம்பே குலுங்கச் சிரித்தார் ரெட்டியார்.

நிழலும், பேச்சுத்துணையும் நாடி வந்த ஆறுமுக ரெட்டியார். "செல்வம் செத்து போயிட்டானாமல்?'' என்றபடி சரவண ரெட்டி பக்கத்தில் உட்கார்ந்தார்.

''அடடே... எப்ப?''

"நேத்து''

"நெனச்சேன்... நெனச்சேன்... செல்லமுத்து நாயக்கருக்கில்ல அடிக்றாப்ல சொன்னான். நாயகர் வசமா மாட்டினாரா?''

"அட நீ ஒண்ணு... ஆளு தூக்குமாட்டி செத்துப் போயிருக்கானó.''

சரவண ரெட்டி திருப்தி அடைந்தவராய் "அப்போ மருந்தடிச்சதால சாகலே...?'' என்றார்.
பின்னர், திடீரென்று ஞாபகம் வந்தவராய் "ஐய்யய்யோ... எதுக்குச் செத்துப் போயிட்டானாம்?'' என்று விசாரித்தார் வருத்தமாய்.

tamilmagan2000@gmail.com

6 கருத்துகள்:

sudar சொன்னது…

Great Story.

Yes, Surely., More selfish people like this. What will do?

nice story..

Really u r the STAR.

sudar சொன்னது…

Great Story.

Yes, Surely., More selfish people like this. What will do?

nice story..

Really u r the STAR.

ஆயில்யன் சொன்னது…

நல்ல கதை !

இரக்கம் மனிதன் மனதில் இருந்து இறங்கி வெகு தூரம் போய்விட்டது!

சமீபகாலங்களில் என்றில்லை எவன் தன்னை மட்டும், தன் குடும்பத்தை மட்டும் நலமாக வளமாக இருக்கவேண்டும்! என்று நினைக்க ஆரம்பித்தானோ, அன்றே அது போய் சேர்ந்துவிட்டது!

கப்பி | Kappi சொன்னது…

நல்ல சிறுகதை!

மங்களூர் சிவா சொன்னது…

கதை மிக அருமை. மிக இயல்பாக எழுதியிருக்கிறீர்கள்.

R A J A சொன்னது…

ரொம்ப நல்லா narrate பண்ணுறீங்க........படிக்கும் போது கண் முன்னால ஒவ்வொரு காட்சியும் அப்படியே வந்து போகுது. குறிப்பாக சரவண ரெட்டியும் செல்வமும் பேசிக்கொள்வது.

LinkWithin

Blog Widget by LinkWithin