வெள்ளி, மே 29, 2009

இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்

அறிஞர் அண்ணா எழுதிய இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் என்று நூலுக்கு நான் எழுதிய முன்னுரை இது. அண்ணாவுக்குப் பேரன் எழுதியதாக நினைத்தால் தப்பில்லை.தம்பிக்காக...


மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது (1993) தமிழ்ப் பாட வகுப்பில் பேராசிரியர் இ. மறைமலை மாணவர்களின் வாசிப்பு ஆர்வம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். மாணவர்கள் தாங்கள் வாசித்த பிடித்தமான புத்தகங்கள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அப்போது எனக்குப் பிடித்தமான புத்தகமாக "இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்'' என்றேன். ஏதோ புத்தகத்தின் தலைப்பு என்று விட்டுவிட முடியவில்லை. தலைப்பு அவரை ஈர்த்திருக்க வேண்டும். "யார் எழுதியது?'' என்றார். "அண்ணா எழுதியது?'' என்றேன்.

"அண்ணாவா?'' என்று வியப்போடு கேட்டுவிட்டு மற்ற மாணவர்களிடம் வரிசையாகக் கேட்டுக் கொண்டே போனார்.

தமிழறிஞருக்குத் தெரியாத ஒரு புத்தகத்தை நாம் சொல்லிவிட்டோம் என்று பெருமிதமாக இருந்தது. எல்லா மாணவரிடத்தும் கேட்டு முடித்துவிட்டு மீண்டும் என்னிடத்தில் வந்தார்.
"எதைப் பற்றி எழுதியிருக்கிறார்?'' என்றார்.

"நெப்போலியன் வாழ்க்கை வரலாற்று நூல்''

"எந்தப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது?''

"பதிப்பகம் தெரியவில்லை. தமிழ்நாடு மின்சார வாரிய செயலகச் சங்க ஆண்டுவிழா மலரில் (1972) இது வெளியாகி இருக்கிறது''

"மின்வாரிய மலரா?''

"என் தந்தையார் அந்தச் சங்கத்தின் தலைவராக இருந்தார். அவர்தான் மலரில் அதை வெளியிடக் காரணமாக இருந்தார்' 'என்றேன்.

அண்ணாவின் நூல்கள் பார்வதி பி.ஏ. ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகை, செவ்வாழை, ரோமாபுரி ராணிகள் உள்ளிட்ட நூல்களை புத்தகக் கடைகளிலோ, நூலகங்களிலோ பார்க்க முடிகிறது. திராவிடர் கழகக் கூட்டங்களில் "தீ பரவட்டும்', "ஆரியமாயை', "கம்பரசம்' போன்ற நூல்களின் மலிவுப் பதிப்பைப் பார்க்க முடியும். இது ஏனோ எங்கும் என் கண்ணில் பட்டதே இல்லை. பலருக்கும் இப்படியொரு நூல் அண்ணாவால் எழுதப்பட்டது தெரிந்திருக்கவில்லை.

பதிப்பாளர்களும் இந்த நூல் பெரிய அளவில் விற்பனை ஆகாது என்று நினைத்தோ என்னவோ பதிப்பில் இருந்தே விடுபட்டுப் போயிருந்தது. அல்லது தொடர்ந்து பதிப்பிக்கப்பட்டு யார் கண்ணிலும் படாமலே போய்விட்டதோ தெரியவில்லை.

இப்போது என் ஆச்சர்யமெல்லாம் இரண்டு.

முதல் ஆச்சர்யம், நெப்போலியன் வாழ்க்கை வரலாற்றை மின்வாரிய ஆண்டு மலரில் என் தந்தை ஏன் பிரசுரித்தார்?

அதற்கு இப்படியொரு சமாதானம் சொல்லிக் கொள்வேன்.

என் தந்தைக்கு அண்ணாவை மிகவும் பிடிக்கும். நெடுஞ்செழியன் நடத்திய மன்றம் இதழில் உதவியாசிரியராக சில மாதங்கள் பணியாற்றிய நேரத்தில் அண்ணாவோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்திய சம்பவத்தைச் சொல்லுவார்.

தனக்கு வைத்த அப்பளத்தை அண்ணா வேகமாகச் சாப்பிட்டுவிட்டதால் தன் இலையில் இருந்த அப்பளத்தை அவருக்குக்

கொடுத்தேன். அண்ணா "ஏன் அப்பளம் பிடிக்காதா?'' என்றார்.
"உங்களுக்குப் பிடிக்கிறதே என்று வைத்தேன்'' என்றேன்.

அண்ணா ரசித்துச் சிரித்தார்.

இதைச் சொல்லும்போது என் தந்தையின் கண்கள் கலங்கிவிடும். அப்படியொரு பிரியம். அவர் படித்த நாளிதழ் எல்லாம் நாத்திகம்,

திராவிட நாடு, முரசொலி மட்டுமே. கல்லூரியில் படித்த காலத்தில் அதை அண்ணா எழுதிய சூட்டோடு இதைப் படித்தவராக என் தந்தை இருந்திருக்கக் கூடும். பசுமரத்தாணியாய் அப்போதே பதிந்துபோய் இருக்கலாம்.

இரண்டாவது ஆச்சர்யம். நெப்போலியன் வாழ்க்கை வரலாற்றை அண்ணா தம் தம்பிகளுக்கு எழுதியது ஏன்?

நெப்போலியனும் அண்ணாவைப் போல் அதிக உயரம் இல்லாதவர்தான். ஆனால் நிச்சயமாக இந்த நூலை எழுதுவதற்கு அது காரணமாக இருக்காது.

தம்பிகளுக்கோ, அவர் அப்போது எதிர் கொண்டிருந்த அரசியல் நெருக்கடிகளுக்கோ நெப்போலியன் கதை எந்தவிதத்தில் துணைபுரிந்தது.

அடிப்படையில் முழு நேர எழுத்தாளர் அல்ல. அரசியல்வாதி. பேச்சாளர்.

ஆனால் பெரிய வாசிப்பாளராகவும் கிடைத்த அரிய நேரத்தில் எழுதிக் கொண்டே இருந்தவராகவும் தெரிகிறார். அரிய திரைப்படங்களைத் தேடிச் சென்று பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.

அவருக்கென்று ஓர் அடுக்கு மொழி நடை வைத்திருந்தார். அது மிடுக்கானது; ஆனால் அதில் அவர் சிக்கிக் கொண்டவராகத் தெரிகிறார். அவர் படித்த மிக உன்னதமான விஷயங்களையும் அந்த நடையில் கொடுக்க முயன்றதால் மலிவாகத் தெரிந்தது மற்றவருக்கு.

கட்சிக்காரர்களுக்காக அவர் சற்று இறங்கிவந்து எழுதியிருக்கிறார் என்றும் தெரிகிறது.

ஒரு நாள் இரவு. பெங்களூர் ஓட்டல் ஒன்றில் அண்ணா ஏதோ படித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் ஈ.வே.கி. சம்பத் இருக்கிறார்.

சம்பத்துக்கு அண்ணாவின் திராவிட நாடு கொள்கை உறுதியானதுதானா என்ற சந்தேகம். "திராவிட நாடு கொள்கையில் உங்களுக்கு நிஜமாகவே நம்பிக்கை இருக்கிறதா?'' என்கிறார். அண்ணா தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கிறார். பதிலே சொல்லவில்லை.

இரண்டு மூன்று முறை இதைப் பற்றி கேட்கிறார். அண்ணா பதில் சொல்லாமல் படித்துக் கொண்டிருக்கிறார்.

அது இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்த புத்தகம். அது டி.ஹெச். லாரன்ஸ் எழுதிய லேடி சாட்டர்லீஸ் லவ்வர் என்ற ஆங்கில நாவல்.

திராவிட நாடு கோரிக்கையும் சாதி மறுப்பு கோரிக்கையும் காங்கிரஸ்கட்சி எதிர்ப்பும் பேசி வந்த ஒருவருக்கு லேடி சாட்டர்லீஸ் படிப்பது அவருடைய விருப்பங்களை மீறிய வாசிப்புத் தேடலாகவே இருக்கிறது.

மேடைகளிலே சாக்ரடீஸ், அலெக்ஸôண்டர், வால்டேர், ரூúஸô, ரஷ்ய புரட்சி என்று பேசியவர். உலகின் அத்தனை பெரிய நதிகளையும் பற்றி அவர் ஒருமுறை பச்சையப்பன் கல்லூரியில் பேசியதை என் தந்தை கூறியிருக்கிறார். ஒருமுறை கல்லூரியில் பேச அழைத்திருக்கிறார்கள். தலைப்பு என்ன என்கிறார் அண்ணா. மாணவர்களுக்கு தலைப்பு கொடுத்துப் பேசச் சொல்வதாக எண்ணமே இல்லை. ஆகவே ஒன்றுமில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதையே தலைப்பாக்கி ஒன்றுமில்லை என்பது குறித்து ஒன்றரை மணி நேரம் பேசியிருக்கிறார். உலகு தழுவிய பரந்துபட்ட ஞானம் அவருக்கு இருந்தது. அவர் தேடித் தேடி வாசித்த படிப்பாளி.

ஆனால் தமிழக அரசியலில் தொண்டர்களுக்கு அவர் தெரிவிக்க வேண்டியதோ மிகச் சொற்பம்தான். சொல்லப்போனால் அவர் தொண்டர்களுக்குத் தனியாகவும் அவருக்காகத் தனியாகவும் செயல்பட்டவராகவே இருக்கிறார். நிறைய கூட்டங்களில் சொற்பொழிவு, கட்சிப் பணி, நாடகப் பணி, திரைக்கதை வசனம், ஓயாத சுற்றுப் பயணம், பத்திரிகைப் பணி எல்லாம் கொண்ட மனிதராகவும் இந்தச் செயல்பாட்டுக்கு அப்பாற்பட்ட ரசனையும் உள்ளவராகவும் அண்ணா இருக்கிறார். அதனால்தான் நெப்போலியன் வாழ்க்கைக் கதையைப் படிக்கவும் அதைத் தமிழில் எழுதவும் அவருக்கு முடிந்திருக்கிறது. எல்லாவுக்கும் மேலாக அதைத் தம்பிக்காக எழுத முடிந்திருக்கிறது.


கார்ஸிகா தீவிலே பிறந்தவன் எலினா தீவிலே இறக்கிறான். இந்த இரண்டுத் தீவுக்கிடையில் அவன் கண்ட ராஜ்ஜியங்கள் என்ன பெயரென்ன புகழென்ன?

பிரான்ஸின் ஆதிக்கத்தில் இருந்த கார்ஸிகா தீவிலே பிறந்தவன் எப்படி பிரெஞ்சு தளபதியானான்? ஜோஸபினைச் சந்திப்பதும் காதலிப்பதும் மணந்த மறுநாளிலேயே இத்தாலி மீது படையெடுத்தது , ரஷ்யாமீது போர்த் தொடுத்து அடைந்த இன்னல்கள் எல்லாம் இருக்கிறது.
ஆனால் இது சரித்திர நாவலா, சரித்திரமா என்பதில்தான் முடிவெடுக்க முடியாத நிலை. சரித்திரக் குறிப்புகள் உள்ளன.

நெப்போலியன் பிறந்த ஊர், பிறந்த ஆண்டு, மணந்த ஆண்டு, முடிசூட்டிக் கொண்ட ஆண்டு, கொள்கை முடிவுகள், குழப்பங்கள்

எல்லாம் இருக்கின்றன. கூடவே தம்பிகளுக்கு எடுத்துச் சொல்கிற வியாக்யானங்களும் உண்டு. தம்பிகளுக்குப் பிடித்ததே அந்த வியாக்யானங்கள்தான். சரித்திர மாணவர்களுக்கோ இவருடைய வியாக்யானங்கள் அத்தனை முக்கியமில்லை. அவர்களுக்குத் தேவை சரித்திரக் குறிப்புகள்.

அதனால்தான் இந்த நூல் அந்த இரு தரப்பினராலும் போற்றத் தக்க நூலாகவோ புறக்கணிக்கப்பட்ட நூலாகவோ இருக்கிறது இப்போதும்.

தமிழ்மகன்
சென்னை -50
06-11 -2008

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin