செவ்வாய், ஜூன் 02, 2009

காந்த முள் -1 புதிய தொடர்சொல்லுங்க சிவகாமி எப்படி இருக்கீங்க?


யாரோ ஒரு பெண்மணி முன் பின் பழகி இருக்காத ஒரு ஆணிடம் "உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்'' என்று சொல்வது விபரீதமாகத் தோன்றலாம். நடக்கவே நடக்காத கற்பனை என்று சொல்கிற அப்பாவிகளும் இருப்பார்கள். அப்படிச் சொல்லியிருந்தால் அது ஏதோ காதல் விவகாரமாக இருக்கும் என்று நினைப்போம்.அது காதல் அல்லது காமம் சம்பந்தப்பட்டது இல்லை என்றால் வேறு எப்படி சாத்தியம்?

டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்ப்பவராக இருந்தால் இது சாத்தியம் என்பது புரிந்திருக்கும்.

தொலைக்காட்சியில் சில சினிமாப் பாடல்களையோ காமெடி நிகழ்ச்சிகளையோ விரும்பிக் கேட்க நினைக்கும் பெண்கள், டி.வி. அறிவிப்பாளராகத் தோன்றும் ஆண்களிடம் இப்படி வெளிப்படையாகத் தெரிவிப்பது கலாசாரமாக மாறிவருகிறது.

பாடல் ஒளிபரப்பும் சானல் ஒன்றில் காலையில் நிகழ்ந்த உரையாடல் இது.
"ரொம்ப நாளா உங்கக் கிட்ட பேசணும்னு ட்ரை பண்ணேங்க.. இன்னைக்குத்தான் லைன் கிடைச்சது''
"கிடைச்சுடுச்சில்ல.. உங்க பேரைச் சொல்லுங்க''

"எனக்கு என்ன பேசறதுன்னே தெரியலை. ஹீ..ஹி''

"உங்க பேரைச் சொல்லுங்க''

"சிவகாமி''

"சொல்லுங்க சிவகாமி, எப்படி இருக்கீங்க?''

"நீங்கன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஹி..ஹி..ஹிக். என் தங்கச்சி பேசணுமாம்.''

"கொடுங்க''

"என் பேர் பானுமதி''

"எங்க இருந்து பேசறீங்க, பானுமதி?''

"வீட்ல இருந்து''

"கடிக்காதீங்க பானுமதி.. எந்த ஊர்ல இருந்து பேசறீங்க?''

"அரக்கோணம்''

"அரக்கோணத்தில விவசாயம்லாம் எப்படி நடக்குது. மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?''

மறுமுனையில் தங்களை விவசாயிகள் என்று நினைத்துவிட்டதில் ஏற்பட்ட பதற்றம்.

"ஐய்யய்யோ நாங்க விவசாயம் பண்ணலை... சர்பத் கடை வெச்சிருக்கோம்''

டி.வி. வர்ணனையாளருக்குத் தாம் செய்த தவறு புரிந்து "ஐ ஆம் சாரி'' எனத் துடிக்கிறார்.

"எங்களுக்கு என்ன பேசறதுன்னே தெரியலை''

"வீட்ல என்ன சமையல்?''

"கிச்சன்..''

"ஓ.. சிக்கனா?''

"இல்ல கிச்சன்''

"சரி அ,தை விடுங்க.. உங்களுக்கு என்ன பிடிக்கும்.. பொழுது போக்கு என்ன?''

"என்ன பேசறதுன்னே தெரியலை.. உங்ககிட்ட பேசணும்னு ரொம்ப ஆசை''

"உங்களுக்கு என்ன பிடிக்கும் சொல்லுங்க?''

"எனக்கு மியுசிக் பிடிக்கும். எங்க அக்காவுக்கு செக்ஸ் ஆடுறது பிடிக்கும்.''
டய்யங்.. டய்யங்.

டி.வி.நிலையத்தில் விபரீதம் புரிந்து தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிடுகிறார்கள்.

தொலைபேசியில் பேசிய சகோதரிக்கு செஸ் விளையாட்டு பிடிக்கும் என்பது நமக்குப் புரிகிறது. உச்சரிப்பில் நேர்ந்த பிழை.

இந்த மேற்படி உரையாடலைத் தொடர்ந்து ஒரு காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதைத் தொடர்ந்து வேறு ஒரு சிவகாமி (பெயரும் ஊரும் மாற்றப்பட்டுள்ளது.) பேசினார்.

மேற்படி பேச்சு உலகமெலாம் பரவும் வகை செய்யப்பட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சு பேசிய அந்த மூவருக்கும் ஏதேனும் பயனளித்திருக்குமா? வர்ணனையாளருக்கு சம்பளம் தருகிறார்கள்.

அதற்காக அவர் பேசுகிறார். மறுமுனையில் பல மாதமாகப் போராடி தம் சொந்தச் செலவில் போன் செய்து என்ன பேசுவதென்றே தெரியாமல் தவித்த சகோதரிகளுக்கு? அது ஒரு உளவியல் திருப்திதான். அவர்கள் மூளைக்குள் நிகழ்ந்த பெருமகிழ்ச்சி விளைவைப் புரிந்து கொள்வது நமக்குக் கடினம்தான். உலகமெலாம் இந்த உரையாடலைக் கேட்டார்களே அவர்கள் அடைந்த பயன்? போனில் பேசிய சகோதரிகளின் உளவியலைப் புரிந்து கொண்டபின் அணுக வேண்டிய அடுத்த கட்டம் இது. ஏனென்றால் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிற பலர் அடுத்து தம் சமையல் அறை விஷயத்தையும் படுக்கை அறை விஷயத்தையும் (கணவன் மனைவிக்கான நிகழ்ச்சி
தனி) பகிர்ந்து கொள்வதற்காகப் போன் செய்து லைன் கிடைக்காதவர்கள். அல்லது பார்வையாளராக மட்டும் இருந்து ரசித்துக் கொண்டிருப்பவர்கள். நிகழ்ச்சியால் யாருக்கு லாபம் என்று யோசிப்பதோ, கேட்பதோ பலருக்குப் பிடிக்கவும் இல்லை. ஏனென்றால் அதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அதை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

போகிற போக்கில் சானலுக்குப் போன் செய்து பேசினால் வீடு தேடி வந்து உருட்டுக்கட்டையால் அடிப்போம் (வடிவேலுவோ, செந்திலோ அடிவாங்குவதைத்தானே மக்கள் காமெடி என்ற பெயரில் பார்த்து ரசிக்கிறார்கள்?)

என்று ஒரு நிகழ்ச்சி ஆரம்பமாகலாம். இன்ட்ராக்டீவ் காமெடி நிகழ்ச்சியாக இருக்கும்.

ஒரு சலிப்பில்தான் இப்படி நான் சொல்கிறேன். ஆனால் அது உண்மையாகிவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

பழைய முத்தாரம் இதழில் முரசொலி மாறனிடம் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்.

‘எம்ஜிஆருக்கு நாடாள வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறதே அதைப்பற்றி உங்கள் கருத்து?'

இது வாசகர் கேட்ட கேள்வி.

முரசொலி மாறன் சலிப்புடன் பதில் சொல்லியிருந்தார்..

‘இப்படியே போனால் ஜெயலலிதாவும்கூட அரசியலுக்கு வந்து நாடாள நினைப்பாரோ என்னவோ?'

சலிப்பின் காரணமாக நாம் தரும் யோசனை எப்படிப் பலிக்கிறது பாருங்கள்?

புதிய தொடர் உயிரோசை.காம் -இல் வெளியாகிறது

2 கருத்துகள்:

சரவணகுமரன் சொன்னது…

:-))

ஆயில்யன் சொன்னது…

//போகிற போக்கில் சானலுக்குப் போன் செய்து பேசினால் வீடு தேடி வந்து உருட்டுக்கட்டையால் அடிப்போம் (வடிவேலுவோ, செந்திலோ அடிவாங்குவதைத்தானே மக்கள் காமெடி என்ற பெயரில் பார்த்து ரசிக்கிறார்கள்?)

என்று ஒரு நிகழ்ச்சி ஆரம்பமாகலாம். இன்ட்ராக்டீவ் காமெடி நிகழ்ச்சியாக இருக்கும்.//

:)))

இதுவும் கூட நடக்கலாம்! ஆனா ஒரு போதும் இது போன்ற நிகழ்ச்சிகளை & அழுவாச்சி காவியங்களை படைக்கும் டிவிக்காரங்களை தாக்குற மாதிரி மக்கள் நடந்துக்கமாட்டாங்க ஏன்ன்னா அவுங்க நொம்ப்ப்ப்ப்ப்ப் நல்லவங்க!

LinkWithin

Blog Widget by LinkWithin