திங்கள், ஜூன் 15, 2009

காந்தமுள்

ஹலோ ‘பைக்' டெஸ்ட்டிங்!
புதுக்கருக்குக் குறையாத பாத்திரம் போலவும் அப்போதுதான் நெய்து மடித்த துணியைப் போலவும் இருந்தது என் புதிய பைக். முழுசாக ஒரு மாசம்தான் ஆகியிருந்தது அதை வாங்கி. அத்தனை நாளாக ஸ்கூட்டரில் திரிந்து கொண்டிருந்தவனுக்கு பைக்கில் இருந்த சொகுசு திளைத்துத் தீர முடியாத சந்தோஷமாக இருந்தது.

ஆறாம்திணை இணைய இதழில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். எழும்பூர் நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள சாலையில் காவல்துறை இணை இயக்குநர் அலுவலகம் அருகே இருந்தது எங்கள் பத்திரிகை அலுவலகம். நீதிமன்றமும் காவல்துறையும் பத்திரிகையும் சூழ இருந்த இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என் புதிய பைக், நிமிட நேரத்தில் திருடு போய்விட்டது. அலுவலகம் இருந்த மூன்றாவது மாடிக்குப் போய்விட்டு திரும்ப வருவதற்குள் காணவில்லை. முதலில் நாம் இன்று பஸ்ஸில் வந்தோமா என்று நினைத்தேன். வண்டியை வேறு எங்கோ நிறுத்தினோமா, பக்கத்தில் பார்க் செய்திருந்த பைக் காரர் வண்டியை எடுக்க வசதி இல்லாமல் நம் பைக்கை வேறு இடத்தில் இழுத்துப் போய் நிறுத்திவிட்டாரா என்று நல்லவிதமாகத்தான் நினைத்தேன். என் அனைத்து நல்லவிதமான யோசனைகளையும் நிராகரித்துவிட்டு பைக் காணாமல் போயிருந்தது.

பிரக்ஞையே இல்லாமல் மீண்டும் மாடிக்கு ஓடினேன். யாரிடம் இதைச் சொல்வதென்று தெரியவில்லை. அங்கே எம்.ஆர்.ராதாவுக்கு நினைவு நாளோ, பிறந்தநாளோ வரப்போவதை ஒட்டி ஆவேசமான ஒரு கட்டுரை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குறுக்கே புகுந்து என் பைக்கைக் காணவில்லை என்று சொல்வதற்குத் தயக்கமாக இருந்தது. என் முக லட்சணத்தைப் பார்த்து அவர்களாகவே ""என்னாச்சு உங்களுக்கு'' என்றனர். இதற்காகவே காத்திருந்தது போல் பதட்டத்துடன் விஷயத்தைச் சொன்னேன். உடனே போலீஸுக்குத் தகவல் கொடுக்கச் சொன்னார்கள். நான் அதுவரை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனதில்லை. தலைகீழாகக் கட்டி வைத்து அடிக்கும் இடம் என்பதாக எனக்கு போலீஸைப் பற்றிப் பதிந்திருந்தது. துணைக்கு ஒரு நண்பரை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்குப் போனேன்.ஆண்ட்ரூஸ் என்று நினைக்கிறேன். அவர்தான் வரவேற்றுப் பேசினார். அவர் ஏட்டா, எஸ்.ஐ.யா என்றெல்லாம் தெரிந்து கொள்வதற்கும் பயமாக இருந்தது. பத்திரிகை என்பதால் உட்கார வைத்து பொறுமையாகக் கேட்டார். யாரையாவது கட்டி வைத்து அடிக்கிறார்களா என்று ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தேன். டீ வந்தது. எனக்கு ஒரு டம்ளரை நீட்டினார். பயத்தில் வாங்கிக் கொண்டேன். அடுத்து "டீ குடிக்கிறியாடா?'' என்றார் ஏகவசனமாய். மறுபடியும் பயந்து போய் டீயை டேபிளில் வைத்துவிட்டேன். ""குடிக்கிறன் சார்'' என்று என் காலுக்குக் கீழே டேபிளுக்கு அடியில் இருந்து சன்னமாய் ஒரு குரல் வந்தது. அலறி எழுந்துவிட்டேன். ஒருவன் என் காலுக்கு அருகில் டேபிள் காலோடு விலங்கிடப்பட்டு வெறும் ஜட்டியுடன் அமர்ந்திருந்தான். ஆண்ட்ரூஸ் "அவன் கிடக்கிறான் நீங்க உக்காருங்க சார்'' என்றார்.

எனக்குக் கீழே, மேலே என எல்லா பக்கமும் பயமாக இருந்தது.

கொஞ்ச நேரத்தில் சரி வாங்க என்று என்னை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டார். அது புதுப்பேட்டைக்குள் அவர் சொல்கிற சந்துகள் வழியாக நுழைந்து அவர் நிறுத்தச் சொன்ன வீட்டின் முன்னால் நின்றது. வெளியே இருந்தபடியே "டேய் ரியாஸ்'' என்றார்.

ரியாஸ் என்பவர் வெளியே வந்தார். "டேய் இன்னிக்கு பைக் எதுவும் எடுத்தியா? சார்

பத்திரிகைல இருக்காரு. பைக் காணமாம்..''

"எங்க ஸார்?'' என்றார் ரியாஸ்.

"கமாண்டர் இன் சீஃப் ரோட்ல''

"ஐயோ.. அங்க நான் எடுக்கல ஸார்''

வேறு எங்கு, யார் வண்டியை எடுத்தாய் என்பதை போலீஸ்காரர் விசாரிக்கவில்லை. "உண்மையைச் சொல்லுடா டேய்'' போலீஸ்காரர் விசாரிக்கிறாரா, கெஞ்சுகிறாரா என்று புரியாத தொனி.

"சொல்றனே ஸார்..'' என்று அலுத்துக் கொண்டான். இப்படி நம்பிக்கை இல்லாமல் துருவித் துருவிக் கேட்பது அவனுக்கு வருத்தமாக இருந்திருக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் திருடன் போலீஸ் விளையாட்டுதான் ஞாபகம் வந்தது.

"பொய் சொல்ல மாட்டான் ஸார்.. '' என்றார் போலீஸ் என்னைப் பார்த்து.

விசாரணை முடிந்துவிட்டது. இப்போது மூவருமாக சேர்ந்து "பைக் எங்கே போயிருக்கும்" என்று வருந்தினோம். மூன்று வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த மூவர் ஒரு விஷயத்துக்காக ஒன்றாக வருந்தியது அந்த நேரத்தில் அது மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்தது.

கிளம்பும் போது "இன்னா பைக் ஸார்'' என்றார் ரியாஸ்.

டி.வி.எஸ். மேக்ஸ் 100 ஆர் என்ற என் வண்டியின் தயாரிப்பின் பெயரைச் சொன்னேன்.

"ஸார் அது இன்னேரம் கடல்ல இருக்கும் ஸார்...''

"கடல்லயா?''

"போட்ல மாட்டினா ஈரமா இருந்தாலும் ஓடுறது டி.வி.எஸ். ஒண்ணுதான்... அதுக்குத்தான் ஸார் இப்ப கிராக்கி. கிடைக்கவே கிடைக்காது ஸார்'' என்று தீர்மானமாகச் சொன்னான்.

நாளைக்கே திருடப் போவது போல நானும் ஆண்ட்ரூஸும் "அப்படியா?'' என்று கேட்டுக் கொண்டோம்.

2 கருத்துகள்:

தமிழினி சொன்னது…

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

ரகுநாதன் சொன்னது…

இதில் ஒரு சிறுகதையே இருக்கு சார்...இதே போல ஒரு சினிமா தனுஷ் நடிச்சது. பொல்லாதவன்.
காந்த முள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதையாகத் தெரிகிறது.

LinkWithin

Blog Widget by LinkWithin