செவ்வாய், ஜூன் 16, 2009

காந்தமுள்

மு.க. அழகிரி திருமணம்!

பெரியார் திடலுக்குள் முதல் முறையாக நான் சென்றது என்னுடைய ஏழாவது வயதில். இரண்டாம் வகுப்பு படிக்கும்போது. 72}ஆம் ஆண்டு. மிகச் சரியாக தேதியோடு சொல்ல வேண்டுமானால் மு.க. அழகிரியின் திருமணநாளில். அங்குதான் அவருக்குத் திருமணம் நடந்தது. முகப்பிலேயே வரவேற்க நின்றிருந்தார் கலைஞர். பெரிய கட்டுப்பாடெல்லாம் கிடையாது. அவருக்குப் பக்கத்தில் காவலுக்கு ஒரு போலீஸ்காரர் நின்றிருந்ததாக ஞாபகம்.

என் தாத்தாவோடு இராமகிருஷ்ண மடத்துக்குச் செல்லும்போது பெரியவர்களைப் பார்க்கும்போது காலில் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும் என்று கற்பிக்கப்பட்டிருந்ததால் அவரைப் பார்த்ததும் அப்பாவின் கையிலிருந்து விடுவித்துக் கொண்டு அவர் காலை நோக்கி ஓடினேன். கலைஞர் என்னைத் தடுத்தது ஞாபகமிருக்கிறது. அதற்குள் அப்பா ஓடிவந்து என்னைப் பிடித்துக் கொண்டார். அதற்குச் சில நாள்களுக்கு முன்னர்தான் தமிழ்நாடு மின்வாரிய செயலக சங்கத்தின் 5-ஆம் ஆண்டுவிழாவை அதன் தலைவராக இருந்த என் தந்தை க.பாலகிருஷ்ணன், அன்றைய முதல்வரான கலைஞரின் தலைமையில் நடத்தியிருந்தார். இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.

அன்றைய விழா என் வாழ்வில் மறக்க முடியாததாக பின்னாளில் மாறியது. நாங்கள் அரங்கத்தின் ஓரத்தில் ஓர் இருக்கையில் இருந்தோம். வந்த பிரபலங்கள் எல்லோரும் எங்களை ஒட்டியே கடந்து போயினர். பெரியார் நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். பாபு ஜெகஜீவன்ராம், காமராஜர் போன்றவர்கள் என்னைக் கடந்து போன போது மிக அருகில் அவர்களைப் பார்க்க முடிந்தது. ஆனாலும் அப்பாவுக்குப் பக்கத்தில் இருந்தவர் எம்.ஜி.ஆர் வருவாரா என்று கேட்டுக் கொண்டிருந்தார். "கட்சியிலிருந்து பிரிஞ்சு போனா என்ன, கல்யாணத்துக்குக் கண்டிப்பா வருவாரு'' என்று என் தந்தை அவருக்கு மட்டுமன்றி தனக்காகவும் ஆறுதலாகச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு பிரபலம் உள்ளே நுழையும்போதும் மக்கள் பின்னால் திரும்பி ஆரவாரக்குரல் எழுப்பினர். எம்.ஜி.ஆர்.தான் வந்துவிட்டதாக ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த வயதில் அங்கு மேடையில் இருந்தவர்கள் எல்லோரையும்விட எம்.ஜி.ஆர்தான் எனக்கும் முக்கியமானவராக இருந்தார்.சிறை வாழ்க்கைக்குப் பிறகு எம்.ஆர்.ராதா அந்தத் திருமணத்துக்கு வந்தார். "ராதா வந்துட்டாரா... போச்சு. அப்ப எம்.ஜி.ஆர். வரமாட்டாரு'' என்று ஒருவர் குண்டைத் தூக்கிப் போட்டார். எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டுப் பிரிந்திருந்தாலும் உதிர்ந்த இலையின் தழும்பு ஆறாத நிலைமை அது என இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. எல்லோரும் வாழ்த்திப் பேச ஆரம்பித்தனர். இனிமேல் எம்.ஜி.ஆர் வரமாட்டார் என்று சமாதானமாகிவிட்டனர். என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எம்.ஜி.ஆர். வருவார் என்றுதான் என்னை அழைத்து வந்திருந்தார் என் தந்தை. பெரியவர்களைப் போல என்னால் சட்டென மாறிக் கொள்ள முடியவில்லை. கடைசியாக ரிக்ஷாக்காரன் மற்றும் நல்லநேரம் ஆகிய எம்.ஜி.ஆரின் படங்களை எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் முறையே பாலாஜி, மேகலா திரையரங்குகளில் பார்த்ததோடு சரி. அதன் பிறகு எம்.ஜி.ஆர். படங்களுக்கு என்னை அழைத்துச் சென்றதில்லை. என்னையும் பார்க்க அனுமதிக்கவில்லை. எம்.ஜி.ஆர். மீது கடும்கோபம் இருந்தது என் தந்தைக்கு. எம்.ஆர்.ராதாவையும் திட்டினார், சரியாகச் சுடவில்லை என்பதற்காக. பிஜு பட்நாயக் எம்.ஜி.ஆரையும் கலைஞரையும் இணைக்கும் முயற்சியில் இறங்கியபோது என் தந்தைக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு கொஞ்ச நஞ்சமல்ல. மிக அற்ப காரணத்துக்காக அது நிறைவேறாமல் போய்விட்டதும் அவர் உடைந்து போய்விட்டார். கலைஞரையும் எம்ஜிஆரையும் நேசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இருந்த மிகப் பெரிய மனப் போராட்டத்தை நான் கண்கூடாகப் பார்த்தேன். எந்த நேரத்திலும் இருவரும் இணைந்து மீண்டும் ஒரு ‘மலைக்கள்ளனை'யோ, ‘அரசிளங்குமரி'யையோ, ‘புதுமைப்பித்தனை‘யோ இணைந்து வழங்குவார்கள் என்று தவித்தனர். பலருக்கு எம்.ஜி.ஆர் இறந்த பின்னர்தான் இனி அது நடக்காது என்ற உண்மை உறைத்தது என்பது எனக்குத் தெரியும். அத்தகையவர்களின் பாசத்தை எம்.ஜி.ஆரும் கலைஞரும் கண்டு கொள்ளாதது ஏன் என்ற துயரம் தோய்ந்த கேள்வி அந்தப் பாசக்காரர்களின் பிள்ளைகளாக இருந்த என் போன்ற சிறுவர்களின் புரிந்து கொள்ள முடியாத பிரச்சினையாக இருந்தது.அழகிரியின் திருமணத்துக்கு வந்தவர்களுக்குச் சாப்பாடு போடவில்லை. கலைஞர் இறுதியாக மைக்கைப் பிடித்து "கையில் கொண்டு வந்திருக்கும் மொய்ப் பணத்தை தமிழகத்தின் எந்த ஓட்டலிலும் செலுத்தலாம். அங்கேயே சாப்பிடலாம்'' என்று கூறி அரங்கத்தில் சிரிப்பொலியை எழுப்பினார். அப்பா என்னை எழும்பூரில் இம்பாலா ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார். அழகிரிக்கான மொய்ப் பணத்தை நாங்கள் அங்குதான் செலுத்தினோம். எம்.ஜி.ஆர் வராத வருத்தம் பாசந்தி சாப்பிடும் போது மறைந்தது.

சமீபத்தில் அழகிரி, தமக்கு வருத்தமாக இருக்கும் சமயங்களில் எம்.ஜி.ஆர். பாடல்களைக் கேட்பதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

எனக்கு அழகிரியை நினைக்கும்போது எம்.ஜி.ஆரைப் பார்க்க முடியாத வருத்தம் வந்து போகும்.

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தமி‌ழய்‌யா‌, உங்‌க வயசை‌ கண்‌டு பி‌டி‌ச்‌சி‌ட்‌டே‌னே‌...

அந்‌தணன்‌

வம்பு விஜய் சொன்னது…

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

SurveySan சொன்னது…

ரெண்டாங்கிளாஸ் படிச்சப்போ நடந்ததெல்லாம் எனக்கு ஞாபகம் இல்லை. நான் மக்கு :)

கபிலன் சொன்னது…

நல்ல அனுபவங்கள்.
போர் அடிக்காம, தெளிவா,அழகா சொல்லி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்!

கபிலன் சொன்னது…

நல்ல அனுபவங்கள்.
போர் அடிக்காம, தெளிவா,அழகா சொல்லி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்!

பட்டாம்பூச்சி சொன்னது…

நல்ல அனுபவம்.
பகிர்ந்தமைக்கு நன்றி.

LinkWithin

Blog Widget by LinkWithin