செவ்வாய், செப்டம்பர் 08, 2009

அவருதாம்பா இவரு!
வாழைப்பழ காமெடியை தமிழ்கூறும் நல்லுலகம் இன்னும் ஒரு கால் நூற்றாண்டுக்காவது மறக்காது என்பது திண்ணம். அந்த நகைச்சுவையை எழுதியவர் ஏ.வீரப்பன்.
டணால் தங்கவேலு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் காலத்திலிருந்து இவருடைய நகைச்சுவை தமிழ் சினிமாவில் வயிறு குலுங்க வைத்திருக்கிறது, மனது நிறைய வைத்து வந்துள்ளது. சமீபத்திய காலங்களில் கவுண்டமணி, செந்தில் டைப் காமெடி என்று ஒரு பெயர் ஏற்படுத்திய காமெடி இவருடையதுதான். எனக்குத் தெரிந்து வடிவேலு, விவேக் காலம் வரை இவருடைய நகைச்சுவை தொடர்ந்துகொண்டிருந்தது.
இவருடைய நகைச்சுவை படம் நெடுக்க தொடர்புடைய நகைச்சுவையாக இருக்கும். அங்கங்கே தனித்தனியாகக் கட்டித் தொங்கவிட்ட சிரிப்புத் தோரணமாக இருக்காது. ஒரு படத்தில் கவுண்டமணி மரத்துக்கு மரம் சாமி படம் போட்டு உண்டியல் கட்டி தினமும் அலுவலகம் வருகிற மாதிரி வந்து கலெக்ஷன் செய்துகொண்டு போவார். முதலில் நடந்து வருவார். பிறகு சைக்கிள், டி.வி.எஸ். 50 என்று கடைசியில் காரில் வந்து கலெக்ட் செய்வதுவரை போகும் அந்த காமெடி. மெல்லிய சமூக அங்கதம் கலந்த அவை படம் ஆரம்பித்ததும் ஆரம்பித்து படம் முடிவதற்கு சற்று முன்பு வரை நம்மை தொடர்ச்சியாக பங்கெடுத்துச் சிரிக்க வைக்கும்.
ருத்ரதாண்டவம் என்ற படம் இவர் கதை வசனத்தில் வெளியான மிகவும் முக்கியமான படம். கடவுள் பூமிக்கு வந்து அவருடைய பார்வையில் சமூகப் பிரச்சினைகளை அலசியிருப்பார். பொதுவாக அவருடைய எல்லா நகைச்சுவையிலும் சமூகப் பிரச்சினை உருளும். ஒரு படத்தில் கவுண்டமணி தேங்காயில் பாம் வைத்துவிட்டதாகப் புரளி கிளப்பிவிட நாடு முழுக்க தேங்காய்கள் உடைக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாகச் சொல்லியிருப்பார். பணத்துக்கு ஆசைப்பட்டு ஊமையனாக நடிப்பார் ஒரு படத்தில் கவுண்டணி. ஆனால் அவருக்கு இளையராஜாவின் இசையில் பின்னணி பாட வேண்டும் என்பதாக ஆசை இருக்கும். இப்படி நிறைய சொல்லலாம்.
ஒருநாள் காலை வண்ணத்திரை செக்யூரிட்டி ஆபிஸர் என்னைத் தொடர்பு கொண்டு வீரப்பன் என்பவர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்று சொன்னபோது நான் இவரை எதிர்பார்க்கவில்லை.
தட்டுத் தடுமாறி அறைக்குள் வந்தார். கைத்தாங்கலாக அவரை ஒருவர் அழைத்துவந்திருந்தார். முள்ளென முளைத்திருந்த சிறிய தாடியினாலும் பார்வை தெரியாதவராக இருந்ததாலும் அவரை சட்டென நான் அடையாளம் காண முடியவில்லை. உடன் வந்தவர்தான் அறிமுகம் செய்தார். எத்தனையோ காமெடி நடிகர்களை ஆளாக்கிவிட்ட இவரை இப்போது யாரும் கண்டுகொள்வதே இல்லை என்று உடன் வந்தவர் வருந்தினார்.
ஏ.வீரப்பன் கையை உயர்த்தி "இருக்கட்டும் இருக்கட்டும் அதனாலென்ன?' என்பது போல சைகையால் சொன்னார்.
"உங்கள் பத்திரிகையில் ஏதாவது காமெடி தொடர் எழுத முடியுமா என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் வந்தேன்'' என்றார்.
"தாராளமாக எழுதுங்கள்'' என்றேன்.
"நான்கு சேப்டர் எழுதி அனுப்புகிறேன். பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள்'' சினிமாவில் கிடைக்கும் சம்பாத்தியம் போல பத்திரிகையில் கிடைக்காது. அவர் ஒரு படத்துக்கு எழுதுவதை அவர் ஒருவருடமெல்லாம் பத்திரிகையில் எழுதினாலும் சம்பாதிக்க முடியாது என்பதைத் தெரிவித்தேன்.
"அது தெரியும்'' எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். மனசு நகைச்சுவைக்கு இடம் தருவதாக இருந்தாலும் வயது இடம் தராத நிலைமை அவருக்கு. பார்வையில்லாமல் தடுமாற்ற நடையில் இன்னொருவர் துணையோடு நடந்து கொண்டிருக்கும்போது அவருடைய நகைச்சுவையின் முகம் மாறிப்போய்விட்டதை உணர முடிந்தது.
அவர் போன பிறகு அலுவலக ஊழியர்கள் யார் அவர் என்று விசாரித்தார்கள். அவரைப் பற்றிச் சொன்னேன்.
"அவரா இவரு?'' என்று ஒருவர் ஆச்சர்யப்பட்டார்.
இன்னொருவர் வாழைப்பழ காமெடியின் தொனியிலேயே "அவர்தாம்பா இவரு'' என்றார். எல்லோரும் சிரித்தனர்.
நகைச்சுவை என்பது இன்னொருவரை செல்லமாகப் புண்படுத்துவது என்று சொல்லுவார்கள். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிரிப்பு உற்பத்தி செய்து கொண்டிருந்தவர் இன்று இன்னொருவர் கைத்தாங்கலாக வந்து வாய்ப்பு கேட்டபோது வருத்தமாக இருந்தது. நான் சிரிக்கவில்லை.

3 கருத்துகள்:

Sridhar Narayanan சொன்னது…

வீரப்பன் நாகேஷுடன் இணைந்து நடித்த படம் ‘சோப்பு சீப்பு கண்ணாடி’ பார்த்திருக்கிறேன்.

கரகாட்டகாரன் வாழைப்பழ காமெடி உண்மையில் ஒரு மலையாளப்படத்தில் வந்து பிறகு கோவை அனுராதா என்னும் நாடக எழுத்தாளரால் ‘தாகம்’ என்னும் டீவி தொடரில் வந்தது.

Robin சொன்னது…

:)

venkat சொன்னது…

நகைச்சுவை என்பது இன்னொருவரை செல்லமாகப் புண்படுத்துவது என்று சொல்லுவார்கள். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிரிப்பு உற்பத்தி செய்து கொண்டிருந்தவர் இன்று இன்னொருவர் கைத்தாங்கலாக வந்து வாய்ப்பு கேட்டபோது வருத்தமாக இருந்தது.

LinkWithin

Blog Widget by LinkWithin