வியாழன், ஜனவரி 07, 2010

நிகழ்கால சரித்திரமும் நாவலும்கடந்த நூற்றாண்டின் சரித்திரத்தோடு இணைந்து கதையைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்த பின்பு (வெட்டுப்புலிக்காக) நிறைய தரவுகளை திரட்ட ஆரம்பித்தேன்.

கடந்த நூற்றாண்டு என்பது ஏறத்தாழ 1909}ல் ஆரம்பிக்கிறது. 2009}ல் முடிகிறது. நிகழ்காலத்தை நோக்கிப் பாய்கிற கடந்த காலத்தின் கதை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். சிலர் இறந்து கொண்டே இருக்க, பலர் பிறந்து கொண்டே இருக்கும் சூழல். புதியவர்களைப் புகுத்தப்புகுத்த தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் உதிக்கிற காலத்தையோ, திராவிடர் கழகம் வீறு கொண்டெழுந்த காலத்தையோ, தி.மு.க.வின் உதயத்தையோ கதாபாத்திரங்களின் ஊடே பதிவு செய்வதில் எனக்குப் பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை. கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, வைகோ, மு.க.அழகிரி, கனிமொழி, கலாநிதி மாறன் என்று சொல்லப்புகும்போது, என்னை ஜாக்கிரதை உணர்வு இறுக்குவதை உணர்ந்தேன். ஆனால் இந்த நூற்றாண்டை அவர்களைப் பற்றிக் குறிப்பிடாமல் எழுத முடியாது என்பதையும் உணர்ந்திருந்தேன். அதனால் இவை யாவற்றையும் படைப்பை பாதிக்காமல் ஒரு தி.மு.க.காரன் பார்வையில் சொல்லிவிடுவது எனக்குச் சுலபமாக இருந்தது.

செங்கல்பட்டு பிராந்தியத்தில் ரயத்துவாரி முறை தன் இறுதிகட்டத்தில் இருந்தது. அதாவது 40}களின் தொடக்கம். ஜமீன்தார் தன் ஆளுகைக்குள் இருந்த கிராமங்களை பைசல் செய்ய ஆரம்பிக்கிறார். நாவல் ஆரம்பிக்கும் இடம் இது. ஆனால் அந்த மக்கள் அதற்கு முந்தைய இரு முப்பதாண்டு அனுபவங்களைப் பேச்சின் நடுவே வெளிப்படுத்துவதால் அதை 1909 என்று மையப்படுத்திக் கொண்டேன்.

இதில் இடம் பெறுகிற இருபதாம் நூற்றாண்டின் பிரமுகர்கள் எடுத்துக் கொண்டால்...

பெரியார், அண்ணா, கலைஞர், மணியம்மை, வீரமணி, ஜெயலலிதா, கமல், ரஜினி, பிரபாகரன், ஸ்டாலின், கனிமொழி, எம்.ஜி.ஆர்., சிவாஜி, எம்.ஜி.சக்ரபாணி, காமராஜர், தீரர் சத்யமூர்த்தி, நேரு, காந்தி, திருப்பூர் குமரன், இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, எம்.கே.ராதா, எம்.ஆர்.ராதா, தியாகராஜ பாகவதர், சுஜாதா, பாலகுமாரன், தி.ஜானகிராமன், சுவாமி விவேகாநந்தர், ராஜாஜி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கலாநிதி மாறன், தயாநிதி மாறன், முரசொலி மாறன், தமிழ்த் திரையுலக முன்னோடிகள் நடராஜ முதலியார், வஜ்ரவேலு முதலியார், சாமிதுரை வின்சென்ட், சீனிவாசா சினிடோன் நாராயணன் ஆகியோர் மற்றும் எல்.வி. பிரசாத், இளையராஜா, ஏ,ஆர்.ரஹ்மான், எம்.எஸ்.விஸ்வநாதன், கலைமாமணி எஸ்.எம். உமர், சென்னை மாநகரம் எழுதிய மா.சு.சம்பந்தன், தமிழறிஞர் அ.சா.ஞானசம்பந்தன், பேராசிரியர் அன்பழகன், பேராசிரியர் பெரியார் தாசன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இன்குலாப், மு.மேத்தா, சிறுத்தையை வெட்டிய சின்னா ரெட்டி, என் தாத்தா, என் தந்தை மற்றும் நான்.... என இத்தனை பேரையும் சொல்லலாம். பலர் பேச்சு வாக்கில் இடம் பெறுகிறார்கள். சிலர் குறுக்கே வந்து போகிறார்கள். சிலர் பாத்திரங்களாகவே இருக்கிறார்கள்.

வரலாறு என்பது மக்கள் பேச்சில் இருந்த சரித்திர ஆதாரமற்ற சில சந்தேகங்களையும் உள்ளடக்கியதுதான். உதாரணத்துக்கு இந்திரா காந்திதான் அவருடைய கணவர் பெரோஸ்காந்தியைக் கொன்றார் என்று சிலர் அரசியல் மேடைகளிலேயே காரசாரமாகப் பேசப்படுவதைக் கேட்டிருக்கிறேன். அப்படி பேசிய ஒருவர் எமர்ஜென்ஸியில் வதைபடுவதைச் சொல்லியிருக்கிறேன். ட்ராம் ஷெட்டாக இருந்த இடம் பெரியாரின் கைக்கு வந்தது காமராஜரின் முயற்சியால்தான் என்பதும் அதே போன்ற பேச்சின் வழி கிடைத்த சரித்திரக் குறிப்பு. இதை நான் எந்த சரித்திர நூலில் இருந்தும் பெற முடியாது. சின்னா ரெட்டி சிறுத்தையைக் கொன்றதைத்தான் விம்கோ கம்பெனி தன் தீப்பெட்டிக்கு எம்பளமாகப் போட்டுக் கொண்டது என்பதற்கும் என் மூதாதையரின் செவி வழி ஆதாரமின்றி வேறு இல்லை. அவர் சிறுத்தையை வெட்டியது முப்பதுகளின் துவக்கத்தில். அதே காலகட்டத்தில் வெட்டுப்புலி தீப்பெட்டி வெளியாகிறது. அதுதான் முடிச்சு. இத்தகைய மக்கள் புழக்கத்தில் இருக்கும் தகவல்களில் இருந்து உண்மையை உரசிப் பார்ப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் கட்டிடங்கள் என்று பார்த்தால், மின்வாரிய செயலகம், ஏ.வி.எம். ஸ்டூடியோ, வாகினி ஸ்டூடியோ, பிரசாத் ஸ்டூடியோ, பி.அண்டு சி மில், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம், பச்சையப்பன் கல்லூரி போன்றவை நாவலோடு வளர்கின்றன. பல பாலங்கள், ஜி.என்.டி.சாலை, பூண்டி நீர்தேக்கம் போன்றவை அதன் ஆரம்ப பிரயத்தனங்களோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கவனமாகப் படித்தால் நுணுக்கமான சில உண்மைகளை அறியமுடியும்.

படித்துவிட்டுப் பேசிய மிகச் சிலர் அதை உணர்ந்து பேசியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. விரைவில் விவாதங்களும் ஆரம்பமாகும் என்பதை உணர்கிறேன்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin