வெள்ளி, ஜனவரி 08, 2010

மகா பெரியவர்


MAN GETS AND FORGETS
GOD GIVES AND FORGIVES

-CHANDRA SEKARENDIRA SARASWATHI1

"சங்கராச்சாரியாரா?''
"ஆமாம் அவர்தான்.''
"அஞ்சலி , எரிச்சல் பட்டுவிடாதே. போன நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இறந்துபோன ஒருவர் சுமார் அறுபது ஆண்டுகள் கழித்துத் திரும்பி வந்திருக்கிறார் என்பதில் ஆச்சர்யமும் விபரீதமும் கலந்திருக்கிறது. அதனால்தான் திரும்பத் திரும்பக் கேட்கிறேன்.''
தென்மண்டல விண்வெளி ஆய்வின் தலைமை விஞ்ஞானி துளசிதாஸின் குரலில் கட்டுக்கடங்காத தவிப்பு தெரிந்தது.
"எனக்கு எரிச்சல் எதுவும் இல்லை.''
"சரி, அங்கேயே இரு. உடனே வருகிறேன்.''
அஞ்சலிக்கு மலைப்பாகத்தான் இருந்தது. கடந்த ஆறு வருட உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. நன்றாக நினைவிருக்கிறது. 2046}ம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் ஒருநாள் வேகா நட்சத்திர மண்டலத்தில் இருந்து கிடைத்த முதல் சமிக்ஞையை அப்போதுதான் எதிர் கொண்டாள்.
இதே துளசிதாஸிடம் அது குறித்துப் பேசினாள். "மிகவும் பலவீனமான சமிக்ஞையாக இருக்கிறது. வழக்கமான காஸ்மிக் அலைகள்தான் என்று அலட்சியப்படுத்த முடியவில்லை.''
"ஐ.ஐ.எஸ்.டி.யில் படிக்கும் காலத்தில் யூ.எஃப்.ஓ. பற்றி நிறைய படித்தாயா?... ஒரு கண்டுபிடிப்பைத் தெரிவிப்பதற்கு முன்னால் ஆயிரம் முறை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும்... புரிந்ததா?'' என்று கண்டிப்புடனான அறிவுரையை வழங்கிவிட்டுப் போய்விட்டார் துளசிதாஸ்.
ஆனால் இப்போது அதி ஆர்வத்துடன் கதவைக்கூட தட்டாமல் உள்ளே நுழைந்தார்.
"வேகாவிலிருந்து வந்த சங்கராச்சாரியாரைக் காண்பி.''
பிக்ஸல் புரோ டீகோடிங்கில் பதிவு செய்திருந்த உருவத்தை கம்ப்யூட்டர் மானிட்டரில் ஒளிர விட்டாள்.
20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியவர், குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கும் வயதானவர். கனத்த மூக்குக் கண்ணாடி. உடம்பின் மேலே சாற்றி வைக்கப்பட்ட தண்டம். சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
துளசிதாஸ் முதலில் அவரையும் அறியாமல் கன்னத்தில் போட்டுக் கொண்டார். இது அனிச்சையாக நடந்தது. பிறகு சற்றே தன் நிலை உணர்ந்தார். சுதாரித்து மீண்டும் ஒருமுறை கன்னத்தில் போட்டுக் கொண்டார். அவருக்கு அதைத்தவிர வேறு வழி தெரியவில்லை.
"எப்படி இது சாத்தியம்?'' என்றார்.
"அறுபது ஆண்டுகள் கழித்து சங்கராச்சாரியார் தோன்றியிருப்பது ஒரு ஆச்சர்யம்தான். ஆனாலும் யாராக இருந்தாலும் 60 ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்திருப்பது எப்படி என்பதுதான் பெரிய ஆச்சர்யம்.'' அஞ்சலியின் விளக்கத்தைப் துளசிதாஸ் அவ்வளவாகப் புரிந்து கொள்ளவில்லை.
"யெஸ்... யெஸ்...'' என்று யோசித்தார்.
ஆறு ஆண்டுகளாகத் தான் பட்ட சிரமங்களை ஆய்வின் விவரங்களைச் சுட்டிக் காட்டினாள். மேசை நிறைய டி.ஓ.டி. பேழைகள்... காஸ்மிக் பதிவிறக்கக் கிறுக்கல்கள்.
"இதைக் கொஞ்சம் சுருக்கி, கோர்வையாகக் கொடுத்தால் போதும். இந்தியாவுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி இது. சர்வதேச விஞ்ஞானக் கழகத்திடம் ஆய்வை சமர்ப்பிக்கலாம். அட சர்வதேசமும் இனி இந்தியாவுக்குள் அடக்கம். எல்லா பயலும் ஆடிப்போயிடுவான். எங்கேயோ போய்ட்ட நீ'' என்று தொடர்பில்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டு போனார்.
"சார் எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருக்கு. ஆனால் அவர் ஏன் வேகா நட்சத்திரத்தில் இருந்து காட்சி தர்றார்னுதான் புரியலை. அதைக் கண்டுபிடிச்சதும்தான். இந்த ஆய்வு பூர்த்தியாகும்'' உறுதியாகக் கூறினாள் அஞ்சலி.
"தெய்வ கடாட்சம் இருக்கு உனக்கு. உன்னால முடியும்'' என்றார் துளசிதாஸ்.

2

"சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஒருவர் இப்போது மீண்டும் ஒளியலைகளாக வந்திருக்கிறார். அவர் வேறு கிரகம் எதிலாவது வாழ்ந்து வருவதற்குச் சாத்தியம் இருக்கிறதா?'' கேள்வியின் துவக்கத்திலேயே பேச்சுப் பதிவு கருவியை இயக்கிவிட்டுத்தான் இந்தக் கேள்வியை ஆரம்பித்தான் கௌதம்.
"இல்லை. அவர் இங்கேயே இறந்து போய் விட்டார்.''
"அப்படியானால் இவர் வேறு ஒருவரா?''
"இருக்க வாய்ப்பில்லை.''
"அவர் இங்கு வாழ்ந்த நேரங்களில் ஒரு சாரார் அவரைக் கடவுளாகத் தொழுதிருக்கிறார்கள். ஒருவேளை அவர் கடவுளாக இருந்து மறுபிறவி எடுத்திருப்பதாக நம்புகிறீர்களா?''
அஞ்சலி சிரித்தாள். "அப்படியிருக்க வாய்ப்பில்லை.''
"இப்படி நீங்கள் மறுப்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா?''
"அந்த ஒளியலைகள் தானாகவே எனது மானிட்டருக்கு வந்து சேர்ந்து விடவில்லை என்பதே எனது மறுப்புக்கு ஆதாரம். பரவலாக ஓடிக் கொண்டிருந்த ஒரு ஒளியலையை எதேச்சையாக நான் கவனித்தேன். மேலும் அத்தகைய சிகா ஹெர்ட்சில் வரும் ரேடியோ அலைகளை நாங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வதில்லை. நானாக வலிந்து சென்றுதான் அதை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டேன். பண்பிறக்கம் செய்து பார்த்தேன். ஆக கடவுள், தேவையற்றதாகக் கருதப்படும் ஒரு அலைவரிசையில் அணுகியிருக்கமாட்டார். அதுவுமில்லாமல் வருகிறவர் நேரடியாக பூமிக்கு வந்திருக்கலாம்.''
"அப்படியானால் இது யாரோ செய்கிற சதி வேலை என்கிறீர்களா?''
"இந்த அளவுக்கு காஸ்ட்லி சதி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. சங்கராச்சாரியார் வருகையையொட்டி யார் இப்போது ஆதாயம் அடைய நினைக்கிறார்களோ அவர்களால் இவ்வளவு பெரிய திட்டம் தீட்ட முடியுமா என்பது சந்தேகமே. எதேச்சையாக நடந்ததை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை.''
"அப்படியானால் இந்த விவகாரத்தில் தெய்வீகத்தன்மை எதுவும் இல்லை என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?''
"சொல்ல முடியும். ஆனால் ஜனங்கள் நம்ப வேண்டுமே? உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களாகவும், டி.ஓ.டி.களாகவும் வெளிவந்து விட்டன. ஷங்தரோ பிஸிக்ஸ் என்று புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி.. புதிய பதவிகள்.. ''
"உலகமே சங்கராச்சாரிதான் கடவுள் என்ற முடிவுக்கு வந்து விட்டது. இனி எதை சொல்லி விளங்க வைப்பது?''
"இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்குச் சுலபமாக விளக்கிவிட முடியும். நமக்குக் கிடைத்திருக்கும் ஒளியலைகள் வேகா நட்சத்திர மண்டலத்திலிருந்து வருபவை. வேகா நட்சத்திரம் இங்கிருந்து 24 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. அதாவது அங்கிருந்து புறப்படும் ஒளி நம்மை வந்து அடைவதற்கு 24 ஆண்டுகள்ஆகின்றன. கடவுளாக இருந்தாலும் இதைவிட வேகமாக இங்கு வந்து சேர முடியாது. ஆக அதன்படியே தான் இங்கு சங்கராச்சாரியார் உருவமும் வந்து சேர்ந்திருக்கிறது. இரண்டாவதாக 24 ஆண்டுகள் பயணம் செய்து வந்தவர், நேரடியாக நம் மானிட்டருக்கோ, உலகில் உள்ள அத்தனை டி.வி. பெட்டிகளுக்கோ தோன்றியிருக்கலாம். அப்படி செய்யவில்லை. நாமாக இழுத்துப் போட்டு ஆராய்ந்ததால் தான் காட்சியளிக்க ஆரம்பித்தார். மூன்றாவதாக இந்த ஒளியலைகளை நான் எதேச்சையாக ஆராய்ந்ததாகச் சொன்னேன். அப்படியானால் எத்தனை ஆண்டுகளாக அந்த ஒளியலைகள் வந்து கொண்டிருக்கின்றன என்பது தெரியவில்லை. கடவுள் கேட்பாரற்று ஆண்டாண்டு காலமாக இருந்திருக்கிறார்...''
"இதில் கடவுள் தன்மை எதுவும் இல்லை என்று இந்திய விஞ்ஞானக் கழகத் தலைவர் பஞ்சாபகேசன் கூற மறுக்கிறாரோ?'' என்றான் கவுதம்.
"மாறாக இதைக் கடவுள் என்று அறிவிக்க முயன்று வருகிறார். பிரதமரும், ஜனாதிபதியும் கூட இதற்கு துணை நிற்கிறார்கள். ஸ்காட் இதை ஒப்புக் கொள்ளவில்லையெனில் உலக விஞ்ஞானக் கழகத்தின் அங்கத்தினர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் இருக்கிறார். அதுதான் ஏனென்று புரியவில்லை. இது சரியில்லை. உலகில் உள்ள அத்தனை ரேடியோ அலை ஆராய்ச்சி நிலையங்களும் இந்த ஆராய்ச்சியில்தான் இருக்கின்றன. கூடிய விரைவில் கடவுள் தோன்றியதற்கானக் காரணம் புரிந்துவிடும். தேவை கொஞ்சம் அவகாசம் மட்டுமே. இந்த நேரத்தில் என்னுடைய பேட்டி வெளிவருவதும் பிரச்னையை பெரிதுபடுத்திவிடும் என்றே தோன்றுகிறது'' என்றாள்.
"உண்மைதான். நீங்கள் கூறியதை ஒரு பேட்டியாக பிரசுரிக்காமல் நானே எழுதிய ஒரு கட்டுரையாக எழுதுகிறேன். இந்த விஷயத்தில் உங்கள் பெயர் வெளிவராமல் இருப்பதே நல்லதென்றுபடுகிறது.''
"மிகவும் நன்றி'' எழுந்தாள் அஞ்சலி.
கவுதம் மிகக் குளிர் அறையில் இருந்து வெளிப்பட்டு மிதக் குளிரில் இருந்த நீண்ட நடையில் நடந்தான். அவன் நடந்து கொண்டிருந்த நடையின் இருபுறமும் ரேடியோ ஆராய்ச்சி சம்பந்தமான பல்வேறு விஞ்ஞானிகளின் அறைகள் அமைந்திருந்தன. அவற்றைக் கடந்து வரவேற்பு அறைக்குள் வந்தபோது ஆளுயர சங்கராச்சாரி படம் ஒன்று தங்க ஃப்ரேம் போடப்பட்டு, நான்கைந்து பேர் இறக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். பணத்தைப் பொருளை ஒரு பொருட்டாக மதிக்காத எளியவரை இத்தனை ஆடம்பரப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க வேதனையாகத்தான் இருந்தது.
"இந்த இடத்தில் மாட்டுங்கள்'' என்று ஒருவர் ஆணையிட்டுக் கொண்டிருந்தார். விஞ்ஞானக்கூடத்தை ஏதோ அம்மன் தேவஸ்தானம் போல அவர் நினைப்பதாகத் தோன்றியது. கவுதம், தாம் ஒரு பொறுப்புமிக்க பணியை செய்யப் போவதாகத் தீர்மானமாக உணர்ந்தான்.

3


பஞ்சாபகேசன் அனுப்பிய லேசர் டிஸ்க்கைப் பலமுறை போட்டுப் பார்த்து விட்டார் ஸ்காட். திரையில் தோன்றிய ஆசாமி பற்றி அவரால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. தெளிவற்ற பிம்பமாக அந்த உருவம் திரையில் தோன்றியது. கனத்த கண்ணாடி அணிந்து கொண்டு உட்கார்ந்திருந்த அல்லது சரிந்திருந்த அந்தப் பெரியவரை தெய்வம் என்று விளிக்க தயக்கம் இருந்தது அவருக்கு! வாழும் காலத்தில் மிக எளிமையாக வாழ்ந்தவர் என்பது மட்டும் தெரிந்தது. அத்வைத மடத்தின் தலைவராக இருந்தவர் என்பதும் வெறும் தரையில் படுத்து உறங்கி, சுவையில்லாத உணவை உண்டு பிரம்மச்சர்யம் பூண்டு அருளாசி வழங்கியவர் என்பதாக விவரம் தெரிந்தது. என்றாலும் இந்தியாவின் தென் மூலையில் என்றோ வாழ்ந்த அவர், மீண்டும் வேற்றுகிரகத்தில் இருந்து எப்படி ஒளியலைகளாக வந்தார் என்பதை அவரால் யூகிக்கவே முடியவில்லை. கீழை நாட்டு அமாஷ்யங்கள் பற்றி அவருக்கு அளவுக்கு அதிகமாகவே சொல்லப்பட்டிருந்தது. அவருடைய தர்க்க ரீதியான மூளை எல்லாவற்றுக்கும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்ததே தவிர பிரமிக்க வேண்டும் என்று தோன்றவில்லை.
ஏற்கெனவே லண்டன் அறிவியல் கழக பிரதிநிதிகளுடன் கலந்து பேசி, அந்த ரேடியோ அலைகளை மேலும் ஆய்வு செய்யும்படியும், உலகின் பல பாகங்களில் இருக்கும் ரேடியோ அலை ஆய்வு மையங்களிடம், அவர்களுக்கு இதுபற்றி கிடைக்கும் ஒவ்வொரு செய்தியை உடனுக்குடன் தெரிவிக்கும்படி விண்ணப்பித்தும் இருந்தார்.அஞ்சலிக்கு மாலை நேரப்பணி என்பதால், அலுவலக நூலகத்தில் சமீபத்திய சஞ்சிகைகளை மேலோட்டமாகப் புரட்டிக் கொண்டிருந்தாள். சொல்லி வைத்தாற்போல எல்லா பத்திரிகைகளும் வெளிக்கிரக சங்கராச்சாரி பற்றி விதம்விதமான யூகங்களை வெளியிட்டிருந்தன.
ஒரு பத்திரிகை, மகா பெரியவர் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொரு தீபாவளி மலரின்போதும் அவருடைய படத்தை அட்டையில் வெளியிட்டதாகப் பெருமிதமாக எழுதியிருந்தது. "சங்கராச்சாரி சுவாமிகளும் நாமும்' என்ற அந்த ஆய்வுக்கட்டுரைக்கு அந்தப் பத்திரிகை பதினைந்து பக்கங்கள் செலவிட்டு இருந்தது.
இன்னொரு பத்திரிகையோ, காஞ்சி மடத்தின் பிரமுகர் ஒருவரிடம் இருந்து "பிரபஞ்சம் தழுவிய ஆன்மா' என்று தொடர் கட்டுரை வெளியிட்டுக் கொண்டிருந்தது. பாரத முனிவர்கள், அடிக்கடி உடலை ஒரு இடத்தில் போட்டுவிட்டு ஆன்மாவை மட்டும் சுமந்து கொண்டு மேல் உலகம் சென்று வரும் வழக்கம் உடையவர்கள். அதேபோல் நம் சங்கராச்சாரி அவர்களும் பலமுறை மேல் உலகம் சென்று வந்தவர். இப்போது உடல் என்னும் சட்டையை இங்கேயே கழற்றி எறிந்துவிட்டு நட்சத்திரத்திலேயே தங்கிவிட்டார் என்ற ரீதியில் போய் கொண்டிருந்தது அந்தக் கட்டுரை.
அவளுக்கு முன்பிருந்த அக்ஸஸ் கார்ட் சிஸ்டம் சிவுக்கென்று உயிர் பெற்று "அஞ்சலிக்கு பிரத்யேக செய்தி'' என்றது. மானிட்டரில் அஞ்சலி விசாரணைக்கு விளிக்கப்பட்டிருக்கும் செய்தி பிரகாசித்துக் கொண்டிருந்தது. விஞ்ஞான முறைப்படி விஞ்ஞானத்தை ஒழித்துக்கட்ட முடிவெடுத்திருக்கிறார்கள் என்று நினைத்து சிரித்தாள்.
லேசாக இருளில் மூழ்கிக் கிடந்தது அந்த விசாரணை அறை. அஞ்சலி உள்ளே நுழைந்த போது ஏழெட்டு இருள் உருவங்கள் மட்டும் தெரிந்தன. சில வினாடிகளுக்கு முன்பு ஏதோ திரையிடப்பட்டு பார்த்ததற்கான அறிகுறியாக புரஜெக்ட்டரும், திரையும் தெரிந்தது. விளக்கு வெளிச்சம் அதிகரிக்கப்பட்டது. உதிரி உதிரியாக சோபாக்கள் இறைந்து கிடக்க, அதில் விஞ்ஞானிகள் சரிந்து உட்காந்திருந்தனர்.

"நான் எதற்காக விசாரிக்கப்படுகிறேன் என்பதை யாராவது விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்றாள் அஞ்சலி.
நீருபூத்த நெற்றியுடன் இருந்த ஒருவர், லேசாக கனைத்துக் கொண்டு, தன் முன்னால் இருந்த ஒரு வெண்தாளை கையில் எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தார். சட்டென திரும்பிப் பார்ப்பதற்கான வசதி குறைவோடு இருந்தது அவருடைய தலை. ஒவ்வொரு முறையும் அவர் தன் முழு உடலோடும்தான் தலையையும் திருப்பினார்.
"நமது துறை சம்பந்தப்பட்ட பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளை நீ வெளிநபர்களோடு பகிர்ந்து கொள்வதாக தகவல் வந்திருக்கிறது... ஒப்புக் கொள்கிறீர்களா?''
"எத்தனை நாட்களாக நான் வெளிநபர்களோடு பகிர்ந்து கொள்வதாக நினைக்கிறீர்கள்?''
"கடந்த ஒரு மாதமாக'' என்று சட்டென்று பதில் சொன்னார் விஜயராகவன்.
"இந்த ஒரு மாதத்தில் நாம் கண்டுபிடித்தது சங்கராச்சாரி விவகாரம் ஒன்றுதான். பகிர்ந்திருந்தால் இதைப் பற்றித்தான் நான் பகிர்ந்திருக்க வேண்டும்'' என்று அஞ்சலியே நேரடியாக விசயத்திற்கு வந்தாள்.
"சங்கராச்சாரி விவகாரம் என்று கூறுவதை நான் ஆட்சேபிக்கிறேன். அவர் நமது கடவுள், நம்மோடு வாழ்ந்து இப்போது வேறொரு கிரகத்தில் இருந்து அருள்பாலிக்கும் தேவன்'' என்று ஒருவர் ஆவேசமாக குரல் கொடுத்தார்.
பைப் புகைத்துக் கொண்டிருந்த ஒருவர், ""பதப்படாதே அஞ்சலி, இந்திய விஞ்ஞானக் கழகத்திலேயே உன்னைப் போல் சிலர் மட்டும் இப்படி விலகி சிந்திப்பதற்கு ஏதேனும் அந்நிய தலையீடு இருக்குமோ என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது'' என்றார்.
"நல்ல ஜோடனை... நான்தான் முதல்முதலாக சங்கராச்சாரி வந்த அலை சமிக்ஞைகளைக் கிரகித்தேன். பிராஸஸ் செய்து மானிட்டரில் ஒட்டிப் பார்த்தேன். சங்கராச்சாரி எனக்குத்தான் தரிசனம் தந்தார் என்று கூறி கடவுளின் தூதுவனாக என்னை அறிவித்துக் கொண்டிருந்தால் கூட நீங்கள் இப்படி விசாரித்து இருக்கமாட்டீர்கள் அல்லவா? '' என்று கேட்டாள் அஞ்சலி.
"ஆகாத கதை'' என்று ஒருவர் அலுத்துக் கொள்ள மற்றவர்கள், அஞ்சலி இத்தனைத் தெளிவாக வாதாடுவாள் என்று எதிர்ப்பார்க்காதக் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அஞ்சலியும், கவுதமும் பேசிக் கொண்டிருந்ததைக் காரணம் காட்டி எப்படி நடவடிக்கை எடுப்பது என்று அவர்களுக்குப் புரியவில்லை.
"திரையில் கவுதமுடன் என்ன பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கூற முடியுமா?'' என்றனர்.
"சங்கராச்சாரி விஷயத்தில் மக்கள் மிகவும் அறியாமையில் உழல்வதாகப் பேசிக் கொண்டிருந்தோம்'' என்றாள்.
"சங்கராச்சாரி கடவுள் இல்லை என்கிறீர்கள்?'' தீர்மானமாக நேருக்கு நேராகக் கேட்டான் ஷிவ்ஷங்கர்.
"ஆமாம்''
"ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். சங்கராச்சாரி சென்ற நூற்றாண்டிலேயே மக்களால் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இப்போது வேற்று கிரகத்தில் இருந்து மீண்டும் வந்திருப்பது அவர் கடவுள்தான் என்பதற்கு ஒரு ஆதாரமாக இருக்கிறது. அதனால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே சங்கராச்சாரியை பின்பற்றத் துவங்கியிருக்கிறார்கள். நீங்கள் இல்லை என்று நிரூபித்துவிட்டு இதுபற்றி எந்த பத்திரிகைக்கு வேண்டுமானாலும் பேட்டி கொடுங்கள். நாங்கள் தடுக்கவில்லை.''
"அவ்வளவுதானே..?'' மேசையின் மீது இருந்த வேற்று கிரக சங்கராச்சாரி அடங்கிய வீடியோ கேசட்டை திரையிட்டாள். டி.வி. திரையில் சங்கராச்சாரி...
"இவரைத்தானே கடவுள் என்கிறீர்கள்? இந்த வீடியோ டெக்குக்கு செல்லும் மின்சாரத்தை தடுத்துவிட்டால் திரையில் இருக்கும் கடவுள் காணாமல் போய்விடுகிறார். இதிலிருந்து இந்த கடவுளுக்கு சுயமாக சக்தி கிடையாது என்பது புரியவில்லையா?'' என்றாள்.
"உன்னை இப்படி பேச வைப்பதும் அவரின் செயல்தான்'' என்றார் பைப் விஞ்ஞானி.
"ஆமாம்... இதோ..'' என்று அங்கிருந்த ஒரு பேப்பர் வெயிட்டை எடுத்து டி.வி. திரையின் மீது எறிந்தாள். பிக்சர் டியூப் சிதறியது. இதுவும் அவரது செயல்தான்'' என்று கூறி விட்டு ஆவேசமாக வெளியேறினாள்.
நீண்ட காரிடாரில் நடந்து லிஃப்ட்டை நெருங்கினாள். தன் அடையாள அட்டையை லிஃப்ட் ஆக்ஸஸ் காமிரா முன் நீட்டினாள். லிஃப்ட் கதவு திறக்கவில்லை. மாறாக, "உங்களுக்கு அனுமதியில்லை' என்றது.


5


இந்திய தலைநகரின் பிரதான ஓட்டல். ஏதோ ஒரு அளவுகோல்படி அதனை ஐந்து நட்சத்திர ஓட்டல் என்றார்கள். மற்றவற்றோடு ஒப்பிட்டால் பத்து நட்சத்திரம் வழங்கலாம்.
அந்த அறையில் மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள். வெளிச்சமும் பதப்படுத்தப்பட்டது மாதிரி தான் இருந்தது. அனைவருமே தம்தமக்குப் பிடித்தமான தங்கநிற போதை திரவங்களைப் பருகிக் கொண்டிருந்தனர். இந்திய விஞ்ஞானக் கழகத்தின் துணைத் தலைவர் அக்ஷய், பிரகாஷ் தவிர மீதம் இருந்த ஐந்து பேரும், நாட்டி தலை எழுத்தை முடிவெடுக்கும் பொறுப்புகளுக்கு நெருக்கமானவர்கள். ஜனாதிபதியின் நேர்முக உதவியாளர் கிஷன், சமயத் தலைவர் ஹரிஷங்கர் மற்றும் பிரதமரின் ஒரே மகன் பிரதாப் சிங்.
பிரகாஷ், ஒரு ஐஸ் சதுரத்தை கிஷனின் கோப்பைக்குள் போட்டுவிட்டு ரகசியமாகச் சிரித்தான்.
பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி இருக்கு என்று பதிலுக்கு சிரித்தான் கிஷன்.
கிஷன சொல்வதைப் பார்த்தால் பிரசிடெண்ட் நூறு சதவீதம் ஆதரவாக இருப்பார் என்று தோன்றுகிறது. அப்பாவும் அப்படியே. இருவருமே கடந்த ஒரு வாரமாக காஞ்சி மடத்தில்தான் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்தியாவை சங்கராலயா என்று பெயர் மாற்றும் விழா ஒன்றை டில்லியில் கோலாகலமாக நடத்தி விடுவார்கள். சங்கராச்சாரியார் கடவுளா, இல்லையா என்று முடிவாவதற்குள் இதெல்லாம் நடந்தாக வேண்டும். இந்தப் பெயர் மாற்றத்தால் மட்டும் நமக்கு பெரிய நன்மை விளைந்துவிடப் போவதில்லை. இதே சூட்டில் நாம் இட்டது சட்டமாக வேண்டும்... அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்'' என்றான் பிரதாப் சிங்.
"நாட்களை கடத்தாமல் விரைவில் பெயர் சூட்டு விழாவுக்கான தேதியைக் குறிப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது '' என்று கிஷன், பிரதாப் சிங் இருவரையும் நோக்கி சொல்லி தள்ளாடிக் கொண்டே கைகளை உயர்த்தினான் பிரகாஷ்.
"இருவரும் கவலையை விடுங்கள்'' என்றனர் ஒருமித்த குரலில்.6


தொலைநோக்கிப் பேசியின் மணி சிணுங்கவே, அஞ்சலி திரையை ஏற்றினாள். கவுதம்.
"ஹலோ கவுதம். எதிர்பார்க்கவே இல்லை.''
"இப்படி சொல்லாமல் கொள்ளாமல் இரண்டு நாட்களாக வீட்டிலேயே இருப்பீர்கள் என்று நானும் எதிர்பார்க்கவில்லை'' கவுதம் குரலில் கடுப்பு.
"நான் விடுமுறையில் இருப்பதாக யார் கூறினார்கள்?'' என்றாள் அஞ்சலி.
"ஏன் உங்கள் அலுவலகத்தினர்தான் கூறினார்கள். இரண்டு நாளாக இதே பதில். பிறகு மீனா என்பவர்தான் உங்கள் தொலைநோக்கி எண்ணைக் கொடுத்தார்.''
"நல்லது. ஆனால், நான் விடுப்பில் இல்லை. என்னை தற்காலிக வேலை நீக்கம் செய்திருக்கிறார்கள். விரைவில் நிரந்தர வேலை நீக்கம் செய்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்'' தொடர்ந்து அஞ்சலியின் விரக்தி சிரிப்பின் சில துளிகள்.
"எதற்காக?''
சொன்னாள்.
"சங்கராச்சாரி ஏற்படுத்தியிருக்கும் பரபரப்பு மக்களை மிகவும் திசை திருப்பிவிட்டது... தயவுசெய்து வேற்றுக் கிரகத்தில் இருந்து சங்கராச்சாரி தோன்றியதற்கு என்னதான் காரணம் என்று கண்டுபிடி'' அஞ்சலி.
"கவுதம் அது எத்தனை சுலபமில்லை. நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதாவது வேறேதும் ரேடியோ அலைகளோ, சமிக்ஞைகளோ வருகிறதா என்று ஆராய முடிந்தது. இந்த சங்கராச்சாரியின் உருவத்தையும் தொடர்ந்து விதவிதமாக பகுத்தாய முடிந்தது. இப்போதோ நான் வீட்டில் இருக்கிறேன்''7


ஸ்காட்டுக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்தியாவில் இருந்து வந்த கோரிக்கைகள் அவருக்கு நகைப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியது. அவரை எதற்காக கடவுள் என்றும், அவதாரம் என்றும் கூறுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள் என்பது புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. அதுவும் விஞ்ஞானிகளே இப்படி ஒரு விஷயத்தை வலியுறுத்துவது அவருக்கு மிகுந்த அவமானமாக இருந்தது.
சங்கராச்சாரி தோன்றும் லேசர் டிஸ்க்கை நூறாவது முறையாக ஆய்ந்தார். வயது முதிர்ந்த ஒரு மனிதர். பழுப்பேறிய அகன்ற துணி அவர் உடல் முழுதும் சுற்றப்பட்டிருந்தது. கண்களில் தடித்த சோடாபுட்டி கண்ணாடி. அவரைச் சுற்றிலும் ஏதோ அசைவுகள். கூடவே ஏதோ இரைச்சல். எத்தனை முறை போட்டுப் பார்த்தாலும் இதில் எந்த மாற்றமும் இல்லை. அலுத்துப் போனார் ஸ்காட். ஒரு பேச்சு இல்லை, ஒரு செய்தி இல்லை. கடந்த நூற்றாண்டில் இருந்த ஒரு மனிதர் அவர் கடவுளாகவே இருக்கட்டும் } மீண்டும் இப்படி தோன்றுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அவரது திட்டம் என்ன?
ஸ்காட் இன்னொரு விதமாகவும் ஆராய்ந்து பார்த்தார். பரமாச்சாரியார் என்று அழைக்கப்படுகிற அவரைப் பற்றி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிவந்த அனைத்து நூல்களையும், சஞ்சிகைகளையும் அவர், டெலிபேக்ஸ் மூலம் ரெக்கார்ட் செய்து தடயம் கிடைக்கிறதா என்று பார்த்தார். ஒரு பிரயோஜனமும் இல்லை.
சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அந்த மனிதருக்கும் அவருக்கு அடுத்த நிலைகளில் இருந்த சங்கராச்சாரிகளுக்கும் ஒரு சாராரிடம் பயங்கரமான மவுசு இருந்திருக்கிறது. அதுவும் சில தமிழக பத்திரிகைகள் அவரை கடவுள் என்றும் அவரைப் பார்ப்பதே ஒரு வரம் என்றும் மாய்ந்து மாய்ந்து எழுதியிருந்தன. ஆனால் தமிழகத்தில் மட்டுமே செல்வாக்குமிக்கவர் என்ற முடிவுக்கும் வரமுடியவில்லை. இந்தியாவின் ஜனாதிபதிகள், பிரதமர்கள், மத்திய மந்திரிகள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், உயர் அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், பத்திரிகைகாரர்கள், எழுத்தாளர்கள் என்று பெருங்கூட்டமே அவருக்கு முன்னால் கைகட்டி வாய் பொத்தி நின்றிருப்பது புரிந்தது.
அவரது குழப்பத்திற்கு விடுதலை தருவது போல தொலைநோக்கிப் பேசி கிணுகிணுத்தது.
பட்டனை அழுத்திவிட்டு ஸ்கிரீனில் தோன்றுபவரை உற்று நோக்கினார் ஸ்காட். அது அவருக்கு தெரியாத முகமாக இருந்தது.
நல் மாலைப்பொழுது... நான் ஐக்கிய ஐரோப்பாவின் பிரதமரின் நேர்முக உதவியாளர் பேசுகிறேன். நாளைக்காலை பிரதமரின் இல்லத்திற்கு வரவும். மிக முக்கியமான விஷயம் குறித்து உங்களிடம் விவாதிக்க வேண்டியிருக்கிறது.
ஸ்காட் "எது குறித்து என்று தெரிவித்தால் நலம்'' என்றார்.
"கடவுள் குறித்து... சந்திப்பு ஏற்பாடுகள் பற்றி உங்கள் உதவியாளரிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம்'' திரை இருண்டது.
பிரதமரின் செயலாளர்கள் இருவர், ஸ்காட், மற்றும் ஸ்காட்டின் உதவியாளர் என்று மிகச் சிலர் மட்டுமே அந்த அறையுனுள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இறைச்சியினால் ஆன பல்வகை உணவுப் பண்டங்கள், பாலாடைக்கட்டி, புரத ஐஸ்கிரீம் என்று உபசரிப்புகள் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து பொறுமை இழந்து போனார் ஸ்காட்.
"கடவுள் பற்றி அரசு எதற்கு கவலைப்பட வேண்டும்?'' ஸ்காட் பேச்சைத் துவக்கி வைத்தார்.
பிரதமரின் செயலாளர்கள் இருவரும் ஒரே நேரத்தில் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசுவதற்கு தயாரானார்கள். பின்பு அவர்களாகவே மானசீக ஒப்பந்தம் செய்து கொண்டவர்களாக ஒருவர் தனது இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தார். அதாவது இன்னொருவரை பேச அனுமதித்ததற்கான அர்த்தம் அது.
"கடவுள் பற்றி அரசு கவலைப்பட வேண்டிய கட்டம் நெருங்கியாயிற்று'' என்று ஆரம்பித்தார். "சங்கராச்சாரி என்பவரை கடவுள் என்று அறிவிக்கும்படி, இந்தியா உங்களிடம் கோரிக்கை விட்டிருந்தது அல்லவா? இப்பொழுது அந்தக் கோரிக்கை மிரட்டலாக மாறியிருக்கிறது.''
"மிரட்டலா?''
"ஆமாம். ஆரம்பத்தில் இந்தியாவின் கோரிக்கையாக மட்டும் இருந்தது. இப்போது கீழ்திசை உலகநாடுகளின் ஒட்டுமொத்த உத்தரவாக மாறியிருக்கிறது.''
"உத்தரவிடுவதற்கு அவர்கள் யார்?'' ஸ்காட் கேள்வியில் அதிர்ச்சி.
"ஸ்காட்... இதில் அதிர்ச்சியடைவதற்கோ, ஆத்திரப்படுவதற்கோ ஒன்றுமில்லை. கீழ்திசை உலக நாடுகள் ஐக்கிய ஐரோப்பாவுடன் ஏகப்பட்ட வர்த்தக உறவுகள் வைத்திருப்பது உங்களுக்குத் தெரியும். செவ்வாய் கிரகக் கட்டுமானப் பணியில் இருந்து சாதாரண ஸ்டாப்லர் பின் வரை அவர்கள் நம்மையே நம்பியிருக்கிறார்கள்.''
ஸ்காட் சிரித்தார். "நம்மையே முழுதாக சார்ந்திருக்கிற நாடுகளின் நிபந்தனைக்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்?''
"இன்னொரு விதமாகப் பாருங்கள் ஸ்காட். அந்த நாடுகள்தான் நம்முடைய பிரதான சந்தை. ஒருவகையில் நாம் அவர்களை சார்ந்திருக்கிறோம்.''
ஸ்காட் மேவாயில் மணிக்கட்டை ஊன்றி தாம் நிலைமையை உணர்ந்திருப்பதைத் தெரியப்படுத்தினார்.
பிரதமரின் செயலாளர் தொடர்ந்தார். "இன்னும் ஒரு வாரத்திற்குள் சங்கராச்சாரியைப் பற்றி ஒரு முடிவுக்கு வரவில்லையென்றால் வர்த்தக கலாச்சார உறவுகளை முறித்துக் கொள்வோம்'' என்று கூறியிருக்கிறார்கள்.
ஸ்காட், தன்னிடம் பிரதமரின் செயலாளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினார்.
"அதற்கு நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்?''- ஸ்காட்.
"சங்கராச்சாரியை கடவுள் என்று அறிவிப்பது பற்றி..!''
"உங்களிடம் இருந்து இப்படி ஒரு நிர்பந்தம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை'' வருத்தப்பட்டார் ஸ்காட்.
"அப்படியானால் ஒரு வாரத்திற்குள் அவர் கடவுள் இல்லை என்பதை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கவாவது முயற்சி செய்யுங்கள்'' என்று விரைப்புடன் எழுந்தனர் இரண்டு செயலாளர்களும். சற்று நிதானித்து "இல்லையென்றால் நாங்களாகவே முடிவை அறிவிக்க வேண்டியிருக்கும்'' என்று கூறிவிட்டு சரசரவென்று செயலர்கள் வெளியேறினர்.
8


திரையில் தோன்றிய சங்கராச்சாரியை சில நிமிடங்கள் நிதானமாகப் பார்த்தாள் அஞ்சலி. திடீரென்று ஏதோ தோன்றியவளாக சங்கராச்சாரிக்கு பின்னணியில் தோன்றிய மங்கலான வண்ணக் குழைவுகளின் மீது கவனம் செலுத்தினாள். கம்ப்யூட்டருக்கு ஆணைகள் பிறப்பித்து, அந்த வண்ணக்குழைவு பிரதேசத்தில் இருந்து ஒவ்வொரு சதுர செ.மீ. பரப்புகளை திரையில் தோற்றுவித்து ஆராய்ந்தாள். குழப்பமான பிம்பங்கள். ஒவ்வொரு சதுர செ.மீ. பரப்பும் குழம்பியது. சங்கராச்சாரியின் பின்னால் ஏதோ துணியால் ஆன திரை இருப்பது போல தெரிந்தது. ஒரு சதுரத்தில் சுத்த வெள்ளை, இன்னொரு சதுரத்தில் இன்னொரு நிறம்.

சுடச்சுட ஒரு டீ வரவழைக்கும்படி ரோபோவிடம் கூறிவிட்டு சற்றே அயர்ந்தாள். கம்ப்யூட்டரை ஆட்டோ பிராஸசில் போட்டு வைத்திருந்ததால், அதுவாகவே ஒவ்வொரு சென்டி மீட்டரையும் திரையில் உருவாக்கியும் ஒரு ஐந்து நிமிட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அடுத்த செ.மீட்டரை தோற்றுவித்துக் கொண்டும் இருந்தது.
ஒரு வாரகால அவகாசம். அதற்குள் விஞ்ஞான விளக்கம் அளித்ததாக வேண்டும். ஒரு ஆஸ்திரேலியாக்காரனுக்கோ, அமெரிக்கனுக்கோ இல்லாத அக்கறை நமக்கு நிச்சயம் வேண்டும். இல்லையேல் பேய்கள் அரசாள நாமே விட்டுக் கொடுத்ததாகிவிடும். இந்தியா முழுவதையும் தங்கள் சட்டைப் பாக்கெட்டுக்குள் வைத்திருக்கிற இவர்கள், நாளை உலகையே விழுங்கி ஏப்பம் விடுவதற்கும் கூட இது வாய்ப்பளித்துவிடும்.
ஸ்காட்டை எப்படியும் சந்தித்தாக வேண்டும். அங்கிருக்கிற விஞ்ஞான வசதிகள், ஒருவேளை இதற்கு விளக்கம் அளிக்கக்கூடும். இந்த நிலையில் அது சாத்தியமா? நிச்சயமாக இந்த ஒரு டிஸ்க்கை கோடி முறை திருப்பிப் போட்டுப் பார்த்தாலும் ஒரு ரகசியமும் அவிழப் போவதில்லை.
டீயைக் கொண்டு வந்து நீட்டியது ரோபோ. அதை வாங்கி டேபிளின் மீது வைத்துவிட்டு திரையை வெறித்தாள்.
வெள்ûளையும் அல்லாத, கருப்பும் அல்லாத ஒரு நிறத்தில் சற்றே பிரகாசிக்கும் ஒருநிறம் திரை முழுவதும் வியாபித்திருந்தது. சரியாகச் சொல்லப் போனால், உலோகம் போல மின்னியது. ஏதோ ஒருஆதாரம் கிடைத்திருப்பதாக உள்மனது பதைத்தது.
தன்னிடமிருந்த கலர் பிரிண்ட் அவுட்டரைக் கொண்டு வந்து ஒவ்வொரு சதுர செ.மீட்டரையும் டிஜோபுரோமைட் பேப்பரில் பிரிண்ட் எடுக்கும்படி ஆணை பிறப்பித்தாள். ஒவ்வொரு சதுர செ.மீ.யும் ஒரு சதுர அடி வீதம் வந்து விழுந்தது.
ஏறத்தாழ ஐநூறு சதுர அடித்துண்டங்கள். ஒவ்வொன்றையும் அதற்கான இடங்களில் வைத்து ஒழுங்குபடுத்தினால் மிகப்பெரிய வரவேற்பறை முழுவதும் நிரவி வைத்த பின்னும் கொஞ்சம் மீதம் இருந்தது.
அருகில் இருந்து பார்க்கும்போது ஒன்றுமே தெரியவில்லை. தோட்டத்தில் இருந்த ஏணியைக் கொண்டு வந்து சுவரோரமாய்ப் போட்டு, ஏணியின் உச்சியில் ஏறி நின்று பார்த்தாள்.
ஆச்சர்யமாக இருந்தது. சங்கராச்சாரிக்குப் பின்னால் யாரோ ஒருவன் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தான்.
திடுக்கிட்டாள் அஞ்சலி.

9


சங்கராச்சாரி சுடப்பட்டு இறந்தாரா? என்று அவளுக்கு திடீர் சந்தேகம் வந்தது.
கொன்றிருந்தால் யார் கொன்றிருப்பார்கள்? நூறு வயது மனிதரை கொலை செய்து என்ன சாதித்திருப்பார்கள்? அக்காலத்தில் சங்கராச்சாரிக்கு எதிரியாக இருந்தவர்கள் அல்லது சங்கராச்சாரியை கடவுள் என்று போற்றாதவர்கள் கொன்றிருந்தால் அது நிச்சயம் காந்தியாரின் படுகொலையை விட மிகப் பெரிய விசாரணையாக நடந்திருக்குமே... அப்படியானால் மூடி மறைத்திருப்பார்களா? உண்மையைப் பிரசவிக்கும் வலி... சிந்தனை சோர்வுடன் சோபாவில் சாய்ந்தாள்.
அதிர்ச்சியான திருப்பம். "நமக்குக் கிடைத்திருந்த ஒருவார கெடுவை இதை வைத்தே இன்னும் கொஞ்ச நாளுக்கு நீட்டிக்கலாம்'' என்றான் கவுதம்.
"எப்படி?'' என்றாள் அஞ்சலி.
"சங்கராச்சாரி கொலை செய்யப்பட்டு இறந்திருப்பதாக சந்தேகிப்பதாக நம் விஞ்ஞான கழகத் தலைவருக்கும், ஜனாதிபதிக்கும் தகவல் தருவோம். கொலை செய்தவர்களைப் பழிவாங்கத்தான் இப்போது வந்திருப்பதாகக்கூட கொஞ்சம் கட்டுக்கதை அமைக்கலாம். இதனால் ஒரு வாரத்திற்குள் இந்தியாவுக்கு சங்கராலயா என்ற பெயர் மாற்றம் செய்யப் போவதை தள்ளி வைக்க முடியும். அதற்குள் ஸ்காட்டை சந்தித்து உதவி கோறலாம்.'' என்றான் கவுதம்.10


ஸ்காட் அஞ்சலியின் கைகளைப் பற்றி நம்பிக்கையுடன் குலுக்கினார்.
"முதன்முதலாக சங்கராச்சாரியின் மின்காந்த அலைகளை ஆய்ந்தவர் என்பதற்காக எனது பாராட்டுக்கள்'' என்று கொஞ்சம் நிறுத்தி "அதே சமயத்தில் என் வேலைக்கு உலை வைக்க இருந்தவரும் நீங்கள்தான்'' என்றார்.
"மின்காந்த அலைகளை இங்கிருக்கிற யாரோ ஒளிபரப்புகிற வாய்ப்பு இல்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்'' என்று விஷயத்திற்கு வந்தாள் அஞ்சலி.
"நாங்களும் அதில் உறுதியாக இருக்கிறோம். சுமார் 25 ஒளியாண்டு தூரத்தில் இருந்து ஒருவர் மின் அலை சமிக்ஞை அனுப்புவதை கற்பனை செய்யவே முடியவில்லை. கடவுள் என்று சுலபமான முடிவுக்கு வந்துவிடுவது மனித இயல்பு. நாம்தான் இதற்கு விளக்கம் கொடுத்தாக வேண்டும். நாம் தாமதிக்கிற ஒவ்வொரு நாளும் மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்திவிடும் என்று அச்சமாக இருக்கிறது'' என்று ஸ்காட் தமது நிஜமான கவலையை தெரிவித்தார்.
"எனக்கு நீங்கள் தரும் வாய்ப்பு, எனக்கு இதுவரையில்லாத பொறுப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. நான் முதலில் இருந்தே ஆரம்பிக்க நினைக்கிறேன். அதாவது சாதாரணமாக விண்ணில் இருந்து வரும் மின் கதிர்களை பரிசோதித்துக் கொண்டிருந்த ஆய்வை துவங்க இருக்கிறேன். இங்கிருக்கிற ரேடியோ கதிர் ஆய்வு மையத்தில் இருக்கிற வசதிகள் பற்றிய விளக்கமும் அங்கிருப்பவர்களின் அறிமுகமும் எனக்கு இப்போது தேவை'' என்றாள் அஞ்சலி.
"இப்போதே ஆரம்பிக்கிறீர்களா? நாளைக்கா?''
"இந்த விநாடியே''
ஸ்காட் சிரித்துக் கொண்டே உள் தொலைக்காட்சி பேசியில் சில ஆணைகளைப் பிறப்பித்தார். கம்பி போல இருந்த ஒரு இளம்பெண், உள்ளே வந்து, "ஹல்லோ அஞ்சலி... அயம் எல்லி ''என்றாள். ரேடியோ அலை ஆய்வு மைய்யத்தில் மிகப் பிரம்மாண்டமான திரையில் சங்கராச்சாரிக்கு பின்புறமிருந்த துப்பாக்கியின் படம் பெரிதுபடுத்தப்பட்டிருந்தது.
"இந்த துப்பாக்கி 1990-களில் இந்தியாவில் கறுப்புப் பூனை படையினர் பயன்படுத்திய துப்பாக்கி ரகம் என்று தெரிய வந்திருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், அப்போது ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மாவின் பாதுகாப்புக்கு நின்றிருந்தவரின் துப்பாக்கி இது'' என்று அதிர்ச்சியான தகவலை அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள்.


11

"சங்கராச்சாரியால் வந்த குழப்பங்கள் போதாதென்று இப்போது சங்கர் தயாள் சர்மா வேறு வந்து சேர்ந்திருக்கிறார்'' என்றான் கவுதம்.
"உண்மையில் சங்கர் தயாள் சர்மாவால் பாதி குழப்பம் தீர்ந்திருக்கிறது'' அஞ்சலி பதட்டமற்ற குரலில் நிதானமாகச் சொன்னாள்.
"எப்படி அஞ்சலி?''
"சங்கராச்சாரி இப்போது எங்கோ இருந்து அருள் பாலிக்கிறார் என்பது இதனால் அடிபட்டுப் போகிறது. இது இருபதாம் நூற்றாண்டின் போது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சங்கர் தயாள் சர்மா, சங்கராச்சாரியை சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ என்று தெளிவாகிறது. சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியான ஒரு வருடத்திலேயே சங்கராச்சாரி இறந்து போய்விட்டார். ஆக இது 1993ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட வீடியோவாகத்தான் இருக்கும்.''
"சரியான கணிப்பு. இப்போதே நான் நிஜம் பத்திரிகைக்கு இதுபற்றி எனது தொடர் கட்டுரையை ஆரம்பித்துவிடலாம் என்று நினைக்கிறேன்'' என்றான் கவுதம்.
"குறிப்பெடுத்துக் கொண்டு வாருங்கள். இது எப்படி ஒளிபரப்பப்பட்டது என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட்டால் தான் உங்கள் கட்டுரை பூர்த்தியாகும்.''
"ஸ்காட்டிடம் இதுபற்றி பேசினேன். ஒருவேளை இந்தப் படம் வேற்றுக் கிரகத்தின் } அதாவது வேகா மண்டலத்தில் இருக்கும் பிரஜைகள் கையில் கிடைத்திருந்து அதை அவர்கள் நமக்குத் தெரியப்படுத்துவதற்காக ஒளிபரப்பியிருப்பார்களோ என்றுகூடச் சிந்தித்துப் பார்த்தோம்.''
"இது லாஜிக்''
"லாஜிக்தான் - ஒரே ஒரு முடிச்சு மட்டும் அவிழ்க்கப்பட்டு விட்டால்...''
"என்னது?''
"பெரிவரின் வீடியோ அவர்களுக்கு எப்படி கிடைத்திருக்கும்?''
அதே சமயம் தொலைநோக்கு பேசியின் ஒலி கிணுகிணுத்தது.
திரையில் ஸ்காட்.
"அஞ்சலி, இரண்டு நாள்காக நீங்கள் ரேடியோ அலை பிரிவில் தீவிரமாக இருந்ததாக கேள்விப்பட்டேன். ஏதாவது முன்னேற்றம் தெரிந்ததா?"" எதிர்பார்ப்பு அதிகம் தெரிந்தது ஸ்காட் குரலில்.
"தெரிந்தது. உங்களுக்கு அவகாசம் இருந்தால் சிலவற்றை நேரில் பேசலாம்'' என்றாள் அஞ்சலி.
"மகிழ்ச்சியுடன்'' என்றார் ஸ்காட்.


12

அறைக்குள் ஸ்காட் மட்டுமே அமர்ந்திருந்தார்.
"இதில் வேகா கிரகவாசிகள் நம்மிடம் தொடர்பு கொள்வதற்கு சங்கராச்சாரியைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று கணிக்க முடிகிறது. சங்கராச்சாரியின் புகைப்படம் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பது நான் கேள்விக்குறி. அதைப் பற்றியும் இந்த கணத்தில் நான் ஒன்று யூகிக்கிறேன்'' என்று நிறுத்தினாள்.
"என்ன?''
"சங்கராச்சாரியின் வீடியோ அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பதையே சற்று மாற்றிச் சிந்திப்போம். இப்போது நமக்கு சங்கராச்சாரியின் உருவப்படம் எப்படி மின்காந்த அலைகள் வடிவத்தில் கிடைத்ததோ, அதே போல அவர்களுக்கும் மின்காந்த அலைகளாகவே கிடைத்திருந்தால்..?''

ஸ்காட் தனது புருவத்தை உயர்த்தி வியந்துவிட்டு, "யார் அனுப்பியிருப்பார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டியிருக்குமே?''என்றார்.
"யாரும் தனிப்பட்ட முறையில் அனுப்பியிருக்க வேண்டிய அவசியம்கூட இல்லை. நாம் தொலைக்காட்சிகளுக்காகப் பயன்படுத்தும் மின்காந்த அலைகளே அவர்களுக்குக் கிடைத்திருக்கலாம். தொலைக்காட்சிக்குப் பயன்படுத்தும் மின்காந்த அலைகள் கிடைமட்டத்தில் பலவீனமாகவும், நேர்க்கோட்டில் பல கோடி மைல்கள் செல்லும் திறனுள்ளவையாகவும் இருப்பது நம் கற்பனைக்குப் போதுமானதாக இருக்கிறது'' என்றான்.
ஸ்காட் தனது இருக்கையில் இருந்து தாவி, அஞ்சலியின் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டார்.
"யுரேகா, யுரேகா என்று கத்திக் கொண்டு ஓட வேண்டும் போல இருக்கிறது அஞ்சலி''
"ஆனால்... இதை நிரூபிக்க நமக்கு அவகாசம் தேவை.''
"இன்னும் என்ன நிரூபிக்க வேண்டும்?''
"பூமியில் தொலைக்காட்சியில் வந்த காட்சியை அவர்கள் நமக்கு திரும்ப அனுப்பி வைப்பதன் மூலம் அவர்களது இருப்பை நமக்கு உணர்த்துகிறார்கள் என்றுதானே நாம் கூறப்போகிறோம்?''
"ஆமாம்'' உற்சாகப்படுத்தினார் ஸ்காட்.
அஞ்சலி எழுந்து சென்று ஸ்காட்டின் அறையில் இருந்த பிரம்மாண்ட டிஜிட்டல் மானிட்டரை உயிரூட்டினாள். சங்கராச்சாரி உருவம் திரையில் தோன்ற பின்புறத்தில் துப்பாக்கி கறுப்பாக தெரிந்தது. டிஜிட்டல் மானிட்டர் என்பதால் சங்கராச்சாரியைச் சுற்றி மற்றும் பலர் நிற்பது மங்கலாகத் தெரிந்தது. சரியாக ஏழு செகண்ட் நேரம் மட்டுமே ஒளிர்ந்து ஒரு செகண்ட் ஓய்வுக்குப் பிறகு திரை மீண்டும் ஒளிர்ந்தது. தலையசைத்துவிட்டு விடைபெற்றாள்.


13


அஞ்சலிக்காகவே ஒதுக்கப்பட்டிருந்த ஆய்வுக்கூடம் அது. அங்கிருந்த கருவிகள் அனைத்தும் ஒரு புள்ளிக்கு பின்னால் நூறு பூஜ்ஜியங்கள் அளவுக்குத் துல்லியமானவை. அஞ்சலி, மின்னணு தொலைநோக்கியில் வேகா நட்சத்திரத்தை வறட்டுத்தனமாக கொஞ்சநேரம் பார்த்தாள்.
கோடி கோடி கோடி... மைல்களுக்கு அப்பால் இருக்கும் வேகா நட்சத்திரக் குடும்பத்தில் ஏதோ ஒரு கோளில் நம்மைப் போலவே ஜீவராசிகள் இருந்து நம்மை தொடர்பு கொள்ள விரும்புகிற அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்க்கவே அஞ்சலிக்கு ஆர்வமாக இருந்தது.
பெரியவர் பூமிக்குப் பயணித்து வந்த ரேடியோ அலைகளுக்கு நெருக்கமான சில அலைவரிசைகளை அஞ்சலி பண்பிறக்கம் செய்து பார்த்தாள். அனைத்தும் விண்வெளியில் ஓயாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் காஸ்மிக் விளைவுகளாகவே இருந்தன. பெரியவர் உருவம் வந்த ரேடியோ அலைகள் ஒரு குறிப்பிட்ட சமிக்ஞையுடன் வந்தன. ஏழு விநாடிக்கு ஒருமுறை அலைகள் துடித்தன. அஞ்சலியை அந்த ரேடியோ அலைகள் கவர்ந்ததற்கு காரணமும் அந்த சமிக்ஞைதான். அப்படி வேறெதேனும் சமிக்ஞைகள் வருகின்றனவா என்பதில் அஞ்சலிக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒருவித தேடல் இருந்தது.
மூன்றுநாள் கெடுவுக்குள் அப்படியொன்றை தேடிக் கண்டுபிடித்துவிட்டால்..? அஞ்சலி அதுதான் தாம் விஞ்ஞானியானதன் பலன் என்றுகூட எண்ணினாள்.
சுமார் 12 மணிநேரம் வெறும் டீயும், பன்றி இறைச்சி பொதிந்த சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு ஒவ்வொரு அலைவரிசையையும் அலசிக் கொண்டிருந்தாள். நிறைய சாட்டிலைட் தொலைக்காட்சிகளின் அலைகள் நீண்ட தூரத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் அலைக்கதிர்களைப் பெருத்த இடையூறுக்கு உள்ளாக்கின. பல அலைக்கதிர் பகுத்தாயும் அளவுக்குத் திராணியற்றுப் போய் மிகவும் சோர்வாக பூமிக்கு வந்தன. அஞ்சலி அவற்றைப் பிடித்து பண்பிறக்கம் செய்வதற்கு மிகுந்த சிரமப்பட்டாள். ஸ்ஸ்ஸ்.... என்கிற ஓயாத இரைச்சல் அவளது மண்டையைக் குழப்பிற்று.
சோர்வில் நாற்காலியிலேயே கொஞ்சம் கண் அயர்ந்தாள்.
இந்தியா முழுசையும் கொளுத்திவிட்டு புதுசா ஒரு இந்தியா செய்யலாம் என்று கவுதம் சிகா வோல்ட் லேசர்களோடு புறப்படுகிறான். பக்கத்தில் அஞ்சலி நின்று கொண்டு ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுகிறாள்.
ஒன்று என்று கூறி முடித்து ஒரு விநாடி இடைவெளியில் இரண்டு என்கிறாள். இரண்டு விநாடிகள் இடைவெளி கொடுத்தாள். இப்படியே மூன்றுக்கு மூன்று விநாடி. நான்குக்கு... நான்கு.பத்துக்கு பத்து விநாடி நேரம் கொடுக்க அஞ்சலி எத்தனிப்பதற்குள் மீண்டும் ஒரு விநாடியிலேயே பத்து என்கிறாள். மூன்று விநாடி இடைவெளியில் பனிரெண்டு. நான்கு விநாடி இடைவெளியில் பதிமூன்று...
நீ பாட்டுக்கு எண்ணிக் கொண்டே போனால் நான் எப்படி சுடுவதாம்? என்று கவுதம் விசுக்கென லேசர் துப்பாக்கியின் விசையை அழுத்த... அஞ்சலி திடுக்கிட்டு எழுந்தாள். எதிரே பண்பிறக்கக் கருவி ஏதேதோ ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது.

காற்றுப் பதனத்தையும் மீறி லேசாக வியர்வை அரும்புகள்.
கனவு வித்தியாசமாக இருந்தது. ஈரமான துணியால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு மறுபடி நாற்காலியில் வந்து அமர்ந்தாள்.
கனவை மெல்ல அசைபோட்டாள்.
ஒரு விநாடி, இரண்டு விநாடி என்று இடைவெளி கொடுத்து ஒன்று, இரண்டு என்று சொல்லிக் கொண்டே வந்தவள், பத்துக்கு மட்டும் பத்து விநாடி இடைவெளி கொடுக்காமல் மீண்டும் ஒரு விநாடி இடைவெளி கொடுத்தது நியூமரிக்கல் குழப்பமாக இருந்தது.
பண்பிறக்க கருவியில் இருந்து வந்த ஓசையை ஒப்பிட்டுப் பார்த்தாள் ஆச்சர்யம்... சுற்றுப்புற ஓசைதான் கனவில் வெளிப்பட்டிருக்கிறது என்று புரிந்ததும், அஞ்சலிக்கு இனம் புரியாத மகிழ்ச்சி.
மீண்டும் பண்பிறக்க கருவியில் வெளிப்பட்ட சப்த, இடைவெளியையும், மானிட்டரில் தெரியும் அலைத் துடிப்புகளையும் ஒப்புமைப்படுத்திப் பார்த்தாள். அவள் நினைத்தது சரி.
ஒன்பது எண்ணிக்கை வரை ஒன்பது விநாடி இடைவெளி என்று வளர்ந்து, மீண்டும் ஒன்று இரண்டு என்று அலைத்துடிப்புகள் வந்தன. ஒன்பது முடிந்ததும் பழையபடி ஒன்றில் இருந்து ஆரம்பித்தது. ஸ்காட்டுக்கு இன்னொரு யுரேகா...
மிகவும் பலவீனமான அலைவரிசையாக இருந்தததால் அதை மானிட்டரில் தக்க வைப்பது சிரமமாக இருந்தது. 21/2002 சிகா ஹெர்ட்ஸ் அலைவரிசை அது. அதை அப்படியே வேவ்சேவ் யூனிட்டிற்கு அனுப்பி அலைத்துடிப்புகளை கொஞ்சம் துல்லியப்படுத்தினாள். மீண்டும் பண்பிறக்கம் செய்யும் பிராஸஸ் யூனிட்டில் செலுத்தி மானிட்டரை அட்ஜஸ்ட் செய்து திரையில் தோன்றி இருக்கும் வேற்றுக் கிரகவாசிகளின் அடுத்த செய்திகளை ஆவலுடன் எதிர்நோக்கினான்.
பெருத்த இரைச்சல். ஆ... ஊ என்று ஒரு சிலர் அலறும் சப்தம் முழுக்க ஏதோ புகை படிந்த மாதிரி தோன்றியது. திரை கொஞ்சம் பிரகாசமடைந்த போது யாரோ ஒருவன். அலறித் துடித்தபடி விழ... காமிரா ஒருவனை நெருக்கமாக காட்டுகிறது. அங்கே... புருஸ்லீ... நுன்ஜாக்கை சுழற்றி கக்கத்தில் இடுக்கியபடி கோபமாக வெறித்தார். அஞ்சலி தடாலடியாக ஸ்காட், மீனா, கவுதம், ரேடியோ பிரிவினர் அனைவருக்கும் இந்த மகிழ்ச்சியான தகவலை தெரிவித்தாள்.


14விசாலமான அறையில் முதல்கட்ட விளக்கங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்காக குழுமினர்.
"இருபதாம் நூற்றாண்டின் கடைசி சில வருடங்கள் உலகம் முழுதும் புருஸ்லி நடித்த எண்டர் தி டிராகன் என்ற திரைப்படம் சக்கைபோடு போட்டது. குறிப்பாக உலகமெங்கும் தொலைக்காட்சியில் அந்தப் படம் ஒலிபரப்பாகியிருக்கிறது. ஆக, பூமியில் இருந்து பல்வேறு தொலைக்காட்சி நிலையங்கள் புரூஸ்லீயை ஒளிபரப்பின. வேகா மண்டலத்தில் வசிப்பவர்களுக்கு இவர் மிகவும் பிரபலமானவராகத் தோன்றியிருக்கலாம். உலகம் முழுமையும் அறிமுகமானவரும், ஐம்பதாண்டு காலம் வரைக்கும் ஞாபகம் உள்ளவருமான ஒருத்தரையே அவர்கள் நமக்காக திரும்ப ஒளிபரப்புகிறார்கள்'' பெருமிதமாக விளக்கினாள் அஞ்சலி.
"சங்கராச்சாரியை எப்படி அவர்களுக்கு பிரபலமானவராக தோன்றியிருக்கும்?'' என்றார் ஸ்காட்.
"இந்தியாவில் அந்த நாள்களில் வாழ்ந்த பல பிரதமர்கள், ஜனாதிபதிகள், நீதிபதிகள், முதல்வர்கள், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பலரும் அவரது காலில் விழுந்து சேவித்திருக்கிறார்கள். அதெல்லாம் டி.வி.யிலும் தொடர்ந்து ஒளிபரப்பானது. பிரமுகர்க்கெல்லாம் பிரமுகராக இருந்ததால் இவர்தான் இந்தியாவின் நிரந்தர பிரமுகர் என்று வேற்று கிரகத்தில் இருப்பவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். மற்றவர்கள் வருகிறார்கள்; போகிறார்கள். இவர் மட்டும் எல்லோரையும் மிஞ்சும் அதிகாரம் பெற்றவரோ என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம்''
ஸ்காட், அடுத்த சில மணி நேரங்களில் விஞ்ஞான பிரமுகர்களைத் தொடர்பு கொண்டு, கான்ஃபரன்ஸ் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.
ஸ்காட்டின் செகரட்டரி வந்து உங்களுக்கு அஞ்சலியிடம் இருந்து தொலைபேசி வந்திருக்கிறது என்றாள்.
ரிசீவரை வாங்கி "ஹலோ'' என்றார் ஸ்காட்.
"மேலும் ஒரு சமிக்ஞை கிடைத்திருக்கிறது'' அஞ்சலியின் குரலில் பதட்டம்.
"என்ன?''
"டினோசர்... பிரம்மாண்டமான டினோசர்''
"டினோசர்?'' என்று கொக்கி போட்டார் ஸ்காட்.
"ஆமாம். ஸ்பீல் பெர்க் தயாரித்த ஜூராசிக் பார்க் படத்தில் இருந்து""15

வேகா கிரகத்தில் இருந்து வந்த டினோசர், புரூஸ்லீ போலவே சங்கராச்சாரியும் ஒரு அடையாளம் மட்டுமே.
ஸ்காட் சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளின் கூட்டத்தை அவசரமாக அறிவித்தார். சர்வ பிரதிநிதிகளும் தத்தமது நாடுகளில் இருந்து லண்டனுக்குப் புறப்படும் அடுத்த விமானங்களிலேயே லண்டனுக்கு வந்து குவிந்தனர்.
அந்த சர்வதேச மாநாட்டில் அஞ்சலியும், கவுதமும் சங்கராச்சாரி பற்றியும் புரூஸ்லீயைப் பற்றியும், ஸ்பீல் பெர்க்கின் டினோசர் பற்றியும் விளக்கமான குறிப்புகளை வழங்கினார்.
சாட்டிலைட் டி.வி.க்கள் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் அஞ்சலியின் பேட்டியை ஒளிபரப்பின.
"பூமியில் இருப்பவர்களோடு வேகாவாசிகள் தொடர்பு கொள்ள விரும்புகிறார்கள் என்கிறீர்கள். ஆனால் நமக்கு அங்கிருந்து வருகிற சமிக்ஞைகள் எல்லாம் சங்கராச்சாரி, டினோசர், புரூஸ்லீ போன்ற போன நூற்றாண்டில் வாழ்ந்த அல்லது உருவாக்கப்பட்டவைகளாகவே இருக்க என்ன காரணம்?'' - இது நிருபரின் கேள்வி.
வேகா கிரகம் இங்கிருந்து ஏறத்தாழ 24 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது. நமது டி.வி. நிலையங்களில் இருந்து புறப்படும் ரேடியோ அலைகள் வேகா கிரகத்தை அடைய 24 ஆண்டுகள் ஆகும். 24 ஆண்டுகளுக்கு முன் அவர்களுக்கு நாம் அனுப்பிய தொலைக்காட்சி } ரேடியோ அலைகள் கிடைக்கப் பெற்றிருக்கும். அதை அவர்கள் மீண்டும் நமக்காக ஒளிபரப்பியிருக்கிறார்கள். அது மீண்டும் பூமியை அடைய 24 ஆண்டுகள் பிடிக்கும். ஆக 48 ஆண்டுகளுக்கு முன்பு நாம் ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே நாம் இப்போது சமிக்ஞையாகப் பெற முடியும் என்று விளக்கினாள் அஞ்சலி.
நிருபர்: வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்ந்து நாம் தொடர்பு கொள்வது எப்படி?
அஞ்சலி: யூகத்தின் அடிப்படையில் நிறைய ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறோம். வேகா மண்டல வாசிகள் பேசும் - அதாவது ஒலி சமிக்ஞை செய்யும் சக்தியுள்ளவர்களா? மொழி போன்ற அறிவு உண்டா என்பதே இப்போது கேள்விக்குறியாக இருக்கிறது. அவர்களின் தகவல் பரிமாற்றம் எத்தகையது என்பதை அறிவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறோம். அவர்களது சமிக்ஞைகளை நாம் கைப்பற்றியிருக்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரிந்தால்தான் மேற்கொண்டு பரிமாற்றங்கள் நிகழ்த்த முடியும். ஒருவேளை அவர்கள் மீண்டும் தமது அடுத்த குறியீடூகளை நமக்கு ஒளிபரப்பலாம். இந்த ஆராய்ச்சிகள் பயனளிக்க மேலும் 48 ஆண்டுகள் இடைவெளியில் நாம் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.
நிருபர்: அதாவது நாம் அவர்களுக்கு தினமும் ஒளிபரப்ப, அவர்கள் நமக்கு தினமும் ஒளிபரப்ப வேண்டியிருக்கும் அல்லவா?
அஞ்சலி: ஆமாம். முதலில் அவர்கள் வாழ்க்கை முறை, தோற்றம் போன்றவை அறியப்பட வேண்டும்.

16


இந்தியாவின் பெயர் மாற்றத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மெகா சைஸ் "மகா பெரியவரி'ன் படம் பாராளுமன்றத்துக்கு முன்னால் பிரகாச ஒளிர்ந்து கொண்டிருந்தது. இந்த எல்லா காட்சிகளையும் அவர் மெüனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.


நன்றி: யுகமாயினி - ஜனவரி '2010

4 கருத்துகள்:

ரகுநாதன் சொன்னது…

//இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், அப்போது ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மாவின் பாதுகாப்புக்கு நின்றிருந்தவரின் துப்பாக்கி இது'' என்று அதிர்ச்சியான தகவலை அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள்.//

இதைப் படித்தபோது அப்படியே சாக் ஆகிட்டேன். அப்புறம் தான் தெரிந்தது.நல்ல கதை. மேலும் பல அறிவியல் சிறுகதைகளை எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து அறிவியல் சிறுகதைகளை எழுதுங்கள்.
ஓரிடம் காத்திருக்கிறது. :)

. சொன்னது…

அறிவியல் புனைகதைகளுக்கு ஓர் இடம் காலியாகத்தான் இருக்கிறது. சொல்லப்போனால் சுஜாதா ஒருவர் மட்டுமே அந்த விசாலமான இடத்தி்ல் தன்னந்தனியாக இருந்துவந்தார். பெரும்பாலோர் கால எந்திரம், ரோபோ, பறக்கும் தட்டு என்பதாக எழுதினார்கள். ஜெயமோகனின் விசும்பு கதைகள் இந்தியத் தன்மையோடு எழுதப்பட்ட விறுவிறுப்பான கதைகள். கம்ப்யூட்டரை தட்டினான் என்று எழுதிவிட்டாலே வி்ான கதைகள் என்று சிலர் நினைத்ததை இவருடைய கதைகள் முற்றாக மாற்றிக் காட்டின.

மகா பெரியவர் என்ற இந்தக் கதை, காரல் சேகன் எழுதிய கான்டாக்ட் என்ற நாவலைப் பற்றி என் நண்பர் ஒருவர் கூறிய போது உதித்த கற்பனை.

வணங்காமுடி...! சொன்னது…

மிகவும் தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும். இப்போது தான் படித்தேன். அற்புதமான கதை. ஒருவிதமான பதட்டத்தோடு, பதைபதைப்போடு ஒன்றிப் படிக்க வைத்த நடை.

ஒரு விஷயம் சுட்டிக்காட்ட விரும்பினேன்.

ஒரு ஒளி ஆண்டு என்பது, ஒளியானது ஒரு ஆண்டு முழுதும் பயணம் செய்யும் தூரம் என்று படித்ததாக நினைவு. அதாவது ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால், ஒரு ஆண்டில் எவ்வளவு தூரம் கடப்பீர்களோ, அதுவே ஒரு ஒளி ஆண்டுக்கான தூரம். அப்படிப்பார்த்தால், உங்களது 48 ஆண்டுகளுக்கான கணக்கு அடிபடுகிறதே.

, சொன்னது…

ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் தூரம். அப்படியானால் அறுபது வினாடிக்கு எவ்வளவு தூரம் செல்லும் என்பதையும்(அதாவது ஒரு நிமிடத்துக்கு), ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு தூரம் செல்லும் என்பதையும் ஒருநாளைக்கு எவ்வளவு தூரம் செல்லும் என்பதையும் கணக்கிட முடியும் அல்லவா? அப்படி 48 ஆண்டுகள் ஒளி பயணித்தால் எவ்வளவு தூரம் பயணம் செய்யுமோ அந்த தூரத்தில் இருக்கும் வேகா என்ற கிரகத்தை மையப்படுத்தித்தான் இக் கதையை எழுதினேன்.
சங்கராச்சாரியாரின் படம் இங்கிருந்து ஒளியலைகளாக அந்த கிரகத்து ஜீவராசிகளின் கையில் கிடைத்திருக்கிறது. அதே போல் அந்த உருவம் தங்களுக்குக் கிடைத்ததை அதே உருவத்தை நமக்கு அனுப்புவதன் மூலம் நம்மைத் தொடர்பு கொள்ள நினைக்கிறார்கள் என்பதுதான் கதையின் அறிவியல் அம்சம்.இதில் உங்கள் சந்தேகம் என்ன என்று எனக்குப் புரியவில்லை.

LinkWithin

Blog Widget by LinkWithin