திங்கள், டிசம்பர் 20, 2010

எழுத்தாளர் ஜெயமோகனோடு...




நாகர்கோவிலில் விஜயதா ஹோட்டலில் அதிகாலை 3 மணிக்குத்தான் போய் சேர்ந்தோம். காலை எழுந்ததும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசினேன். சந்தித்துப் பேச விரும்புகிறேன், நேரமமிருக்குமா என்றேன். மாலை ஏழு மணிக்கு கோவை கிளம்புகிறேன். அதுவரை வீட்டில்தான் இருப்பேன் என்றார். பார்வதி புரத்தில் அமைதியான பகுதியில் இருந்தது அவருடைய வீடு. அவருடைய துணைவியாரிடம் அறிமுகப்படுத்தும்போது வெட்டுப்புலி எழுதியவர் இவர்தான் என்றார்.
திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தில் என்னுடைய சிறுகதை தொகுதி ஒன்று மொழிபெயர்க்கப்பட்டு சனிக்கிழமை மாலை வெளியிடப்பட இருப்பதைச் சொல்லிவிட்டு, காலபிம்பம் என்ற அந்தத் தொகுதியை அவரிடம் கொடுத்தேன்.
அவர் திருவனந்தபுரத்துக்கும் தமிழுக்குமான தற்கால உறவுநிலைபற்றி சொல்ல ஆரம்பித்தார். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, வையாபுரி பிள்ளை, ஷண்முக சுப்பையா, காசியபன், நகுலன், ஆ.மாதவன், நீலபத்மநாபன் என பலரையும் பற்றி பேச்சு ஓடியது. கிட்டத்தட்ட நானும் அவரும் முதன் முதலாக சந்தித்து மாதிரிதான். இதற்கு முன்னால் புத்தக சந்தையிலும் கவிஞர் ராஜமார்த்தாண்டன் மகன் திருமணத்திலும் ஓரிரு வார்த்தைகள் பேசியதோடு சரி. ஒருமனிதரைச் சந்தித்ததும் பேச நேரம் ஒதுக்கி, இவ்வளவு தகவல்களைச் சொல்லுவது ஆச்சர்யமாக இருந்தது. சிலர் ஏதாவது கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லுகிற மாதிரிதான் பேசுவார்கள். ஜெயமோகனிடம் அப்படி தயங்கித் தயங்கிப் பேசிக் கொண்டிருக்க நேரவில்லை.
திருவனந்தபுரத்தில் நகுலன், ஆ.மாதவன், நீல.பத்மநாபன் மூவருக்குமான நட்பை அவர் விவரித்தது நன்றாக இருந்தது. நகுலன் ஒரு நேரத்தில் மற்ற இருவரில் ஒருவருடன்தான் நட்பு பாராட்டுவார் என்றார். அதாவது நீல.பத்மநாபனிடம் பழகி வரும்போது ஆ.மாதவனிடம் பழக மாட்டார்.
சுவாரஸ்மான சுபாவங்கள்.
சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலுக்கு உருவான ஏறுமாறான விமர்சனங்கள் பற்றி கேட்டேன். அவர் விஷ்ணுபுரம் நாவல் வெளியான நேரத்தில் இருந்து பல்வேறு சம்பவங்களைச் சொன்னார். விமர்சனங்கள் புத்தகத்தின் ஆதார சுவையை அலசுவதை விட்டுவிட்டு எழுதிய நபர், அவரோடு சம்பந்தபட்ட வேறு சம்பவங்களையும் சேர்த்துக் கொண்டு காழ்ப்புணர்வுடன் வெளியாவதாக வருத்தப்பட்டார்.
மணிக்கணக்காகப் பேசிக் கொண்டே இருக்கலாம்போல இருந்தது. என்னுடன் என்னுடைய மைத்துனர் விவேகானந்தன் வந்திருந்தார். அறையில் மற்ற நண்பர்கள் காத்திருந்தனர். அவர்களுடைய அடுத்தகட்ட திட்டங்களை உத்தேசிக்க வேண்டியிருந்தது. மீன் முட்டி, பொன்முடி போன்ற இயற்கைச் சூழலுக்குச் செல்ல வேண்டும் என்று அவர்கள் வரும் வழியில் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
விடைபெறுவதற்கு முன்பு அவர் சொன்னார்.
எழுத்தாளர்களுக்கு திடீரென்று சில கதைகள் பெரிய அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அதை அவர்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். வாசகன் எழுத்தாளனைப் பற்றி முன்முடிவை எடுத்துவிட்டால் அதை மாற்றுவது சிரமம் என்றார். வெட்டுப்புலி எனக்கு அத்தகைய ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொன்னார். தக்க வைத்துக் கொள்ளவேண்டும்.

1 கருத்து:

ரகுநாதன் சொன்னது…

//எழுத்தாளர்களுக்கு திடீரென்று சில கதைகள் பெரிய அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அதை அவர்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். வாசகன் எழுத்தாளனைப் பற்றி முன்முடிவை எடுத்துவிட்டால் அதை மாற்றுவது சிரமம் என்றார். வெட்டுப்புலி எனக்கு அத்தகைய ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொன்னார். தக்க வைத்துக் கொள்ளவேண்டும்//.

உண்மைதான் சார்...

LinkWithin

Blog Widget by LinkWithin