வெள்ளி, நவம்பர் 09, 2007

பச்சைத் தமிழனும் வெள்ளைத் தமிழனும்!




தமிழ்ப் படத்தில் நடிக்கும் தமிழ் நடிகைகள் யார் யார் என்று கேட்டால்... ரசிகர்கள் ரொம்பத்தான் குழம்பிப் போவார்கள். அசின், நமீதா, நயன்தாரா, ஸ்ரேயா, மாளவிகா, மீரா ஜாஸ்மின், ஜோதிகா, சிம்ரன்.... அட யாருமே தமிழ் நடிகை இல்லையே?

""மிக அதிக நாட்களாக தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை மனோரமாதான்'' என்று ஒருமுறை நடிகர் சத்யராஜ் நகைச்சுவையாகச் சொன்னார். ஆனால் இது நகைச்சுவையான விஷயம் இல்லை என்பது அவருக்கும் தெரியும். மீனா, த்ரிஷா, சங்கீதா... என பத்து விரல்களுக்குள் அடங்கிவிடுவார்கள்.



""தமிழ் ரசிகர்களுக்கு நடிகைகள் என்பவர்கள் வெள்ளை வேளேர் என்று இருக்க வேண்டும். கறுப்பாகவோ, மாநிறமாகவோ ஒரு நடிகையை தமிழ் ரசிகர்கள் கற்பனைகூட செய்து பார்ப்பதில்லை. கறுப்பு- வெள்ளை பட காலத்தில்தான் கறுப்பாக இருந்தாலும் பரவாயில்லை நன்றாக நடித்தால் போதும் என்று நினைத்தார்கள். கலர் படங்கள் வெளிவர ஆரம்பித்ததுமே வண்ணம் ஒரு முக்கிய அம்சமாக மாறிவிட்டது'' என்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.

""நடிகைகள் வெள்ளையாகத்தான் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் யாராவது ஊர்வலம் போனார்களா...? தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அவர்களாகவே இப்படி முடிவெடுக்கிறார்கள். அதை ரசிகர்களின் முடிவாகத் தெரிவிக்கிறார்கள். கதாநாயகி வேடத்தை விடுங்கள். நான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஒரு படத்தின் கல்யாண காட்சி. நிறைய துணை நடிகைகள் தேவைப்பட்டார்கள். வந்திருந்த துணை நடிகைகளில் பாதி பேர் கறுப்பாக இருப்பதனால் நிராகரிக்கப்பட்டதைப் பார்த்தேன். கேட்டதற்கு "சிவப்பாக இருந்தால்தான் ஸீன் நன்றாக இருக்கும்' என்றார்கள். நிஜ வாழ்க்கையில் தமிழ் நாட்டில் எந்தக் கல்யாண ஆல்பத்தைப் பார்த்தாலும் பலர் கறுப்பாகத்தானே தெரிகிறார்கள்? அப்புறம் எப்படி இந்த முடிவுக்கு வருகிறார்கள் என்றே புரியவில்லை'' என்கிறார் தங்கர்பச்சான். கறுப்பாக இருந்தாலும் நந்திதா தாஸ்தானே இவருடைய "அழகி'?

ஒரு சந்திப்பின் போது தன்னுடைய படங்களில் எல்லாம் தொடர்ந்து வட இந்திய நடிகைகளாக இறக்குமதி செய்வதாக டைரக்டர் ஷங்கர் மீது ஒரு கேள்விக் கணையைப் பாய்ச்சியபோது அவர் சொன்ன பதில் இது:

""என்னுடைய முதல் படத்தின்போது கதையைப் பற்றி மட்டும்தான் யோசித்து வைத்திருந்தேன். "ஜென்டில்மேன்' படக் கதையை கமல்ஹாசன், சரத்குமார் என்று பலரிடம் சொன்னேன். கடைசியில் சரத்குமார் நடிப்பதாக இருந்தது. தயாரிப்பாளர் தரப்பு பிரச்சினையால் அவர் நடிக்க முடியாமல் போனது. படத்துக்கு பூஜை தேதியெல்லாம் குறித்துவிட்டதால் உடனே வேறு ஒருவரை அவசரமாக முடிவு செய்ய வேண்டியிருந்தது.



சினிமா டைரக்டரியை எடுத்து ஹீரோ பெயர்களைப் பார்த்தபோது அகர வரிசைப்படி முதலில் அர்ஜுன் பெயர் இருந்தது. அவரையை பேசலாம் என்றேன். அதே போலத்தான் நாயகிகள் விஷயத்திலும் அப்போது பிரபலமாக இருந்த ரோஜா, மீனா ஆகியோரைத் தொடர்பு கொண்டபோது கால்ஷீட் கிடைக்கவில்லை. கதைக்குப் பொறுத்தமாக யார் கிடைக்கிறார்களோ அவர்களை வைத்து எடுப்பது என்று போனைச் சுழற்றினோம். மதுபாலா கிடைத்தார்.

அடுத்து "காதலன்' படத்தில் கவர்னரின் பெண் என்பதால் வட இந்தியப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து நக்மாவைப் பிடித்தோம். தமிழக கவர்னர்கள் வட இந்தியாவில் இருந்து வந்தவர்களாக இருப்பதனால் அந்த முடிவு. அப்புறம் "இந்தியனி'ல் சுகன்யாவும் கஸ்தூரியும் நடித்தார்கள். அவர்கள் தமிழ் நடிகைகள்தானே?'' என்றார் ஷங்கர். "சிவாஜி'யில் ரஜினியே வெள்ளையாக இல்லை என்று ஸ்ரேயா சொல்கிறார். ரஜினியும் வெள்ளைக்காரன் போல வேடமிட்டுக் கொண்டு "இதுவரை நான் பச்சைத் தமிழன் இனிமேல் வெள்ளைத் தமிழன்' என்று பாடியிருக்கிறார்.

இதில் பாடல் காட்சியில் மட்டுமே தேவைப்படுகிற நாயகிகளின் நிலை?

கதையும் பிரம்மாண்டமும் கதாநாயகனும் அமைந்துவிட்டால் போதும். கதாநாயகி பாடல்காட்சியில் டான்ஸ் ஆடுவதற்கு மட்டும்தான் என்ற நிலை இருக்கிறது. அதற்கு கொழுக் மொழுக் என்று சிவப்பான ஒரு கிளாமர் டால் இருந்தால் போதும் என்பதுதான் இன்றைய தமிழ்சினிமாவின் நிலை. என்ன சொல்கிறார்கள் தமிழ் படஉலகினர்?

""தமிழ்சினிமா என்று பிரித்துப் பார்ப்பது சரியாக இருக்காது. தமிழ்ப்படம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் ஓவர் சீஸ் எனப்படும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஐரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கெல்லாம் விநியோகிக்கப்படுகிறது. நடிகையின் முகம் இந்திய லட்சணத்தோடு இந்திய அளவில் பிரபலமாக இருந்தால் அது பிசினஸýக்கு நல்லது என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது'' என்கிறார் ஒரு மீரான் சாஹிப் விநியோகஸ்தர்.

வளர்ந்து வரும் ஒரு தமிழ் நடிகையின் தாய்க்குலம் சொன்ன விஷயம் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.



""வேறு மாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் நாம் நடிப்பது நம்ம ஊரு மக்களுக்குத் தெரியப் போவதில்லை என்ற தைரியத்திலேயே அளவுக்கு அதிகமாகக் கவர்ச்சி காட்டி நடிக்கிறார்கள். இங்கே பிறந்தவர்களுக்கு அப்படி நடித்துவிட்டு மீண்டும் இங்கே நடமாடுவதில் கூச்சம் இருக்கிறது'' என்கிறார்.

குஜராத்தில் இருந்து வந்த தேஜாஸ்ரீயிடம் இதற்கு பதில் கேட்டபோது, ""ஏன் இங்கே கூச்சமாக இருந்தால் இவர்கள் எல்லாம் ஹிந்தி படத்தில் போய் கலக்க வேண்டியதுதானே?'' என்கிறார்.

மணமகள் தேவை பகுதியில் பெண்களுக்கு வயது.சிவப்பு நிறம் என்று குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. மனைவியாக வரப் போகிறவள் சிவப்பாக இருக்க வேண்டும் என்பது எல்லா நிறத் தமிழனின் ஆசையாகவும் இருக்கும் போது கதாநாயகிகள் மட்டும் சிவப்பாக இருக்கக் கூடாதா என்ன?

குஷ்பு, தேவயானி என முன்னணி நடிகைகள் எல்லாம் நம்ம ஊரு மருமகள்களாகிவிட்டார்கள். நம்ம ஊரு ஹேமமாலினி, ஸ்ரீதேவி எல்லாம் வட இந்திய மருமகள்களாகிவிட்டார்கள். அப்புறம் எதுக்குசார் சண்டை? யார் கண்டது அடுத்த தமிழக மருமகள் தேஜாஸ்ரீயாகக்கூட இருக்கலாம்.

-தமிழ்மகன்

2 கருத்துகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//மணமகள் தேவை பகுதியில் பெண்களுக்கு வயது.சிவப்பு நிறம் என்று குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. மனைவியாக வரப் போகிறவள் சிவப்பாக இருக்க வேண்டும் என்பது எல்லா நிறத் தமிழனின் ஆசையாகவும் இருக்கும் போது கதாநாயகிகள் மட்டும் சிவப்பாக இருக்கக் கூடாதா என்ன? //

ஆக்கத்தை வாசிக்கும் போது இதுதான் வினைவு வந்தது; நீங்களும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

Nakkiran சொன்னது…

Meena is a malayali...

LinkWithin

Blog Widget by LinkWithin